Published:Updated:

`20 ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கச் சொன்னார்கள்!' -1ம் வகுப்பு மாணவனுக்கு அதிர்ச்சிகொடுத்த விசில்

அஸ்வின் பாண்டியன்
அஸ்வின் பாண்டியன்

சிவகங்கையில் பல மணிநேரப் போராட்டத்துக்குப்பின் எண்டோஸ்கோபி உதவியுடன் சிறுவன் விழுங்கிய விசிலை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த நாகஜோதி- திலீப்குமார் தம்பதிக்கு கெளதம், அஸ்வின் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அருகே உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்துவருகின்றனர்.

கெளதம், அஸ்வின்
கெளதம், அஸ்வின்

இந்த நிலையில், 1-ம் வகுப்பு படிக்கும் அஸ்வின் பாண்டியன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது பிளாஸ்டிக் விசிலை விழுங்கிவிட்டார். இதையடுத்து, பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின் எண்டோஸ்கோபி உதவியுடன் விசிலை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

சிறுவனின் தாய் நாகஜோதியிடம் பேசினோம். `எனது இரண்டு மகன்களும் கல்லல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்துவருகின்றனர். இரண்டு நாள்களுக்குமுன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அஸ்வினைக் கூட்டிச் செல்ல ஆள் இல்லை என்று அவனை வீட்டில் இருக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், `விழாவில் கலந்துகொள்ள வேண்டும்' என ஆசிரியர் கேட்டதால் அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றோம்.

எண்டோஸ்கோப்பி காட்சியில் விசில்
எண்டோஸ்கோப்பி காட்சியில் விசில்

விழாவில் அனைவரும் 20 ரூபாய்க்கு பரிசுப் பொருள் ஒன்றை வாங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். வண்ண காகிதத்தில் ஒட்டப்பட்டு அந்தப் பரிசுப்பொருள் இருந்தது. விழா முடிந்ததும் அஸ்வினை என் சகோதரி டூவீலரில் அழைத்து வந்துள்ளார். அப்போது அஸ்வின் வாங்கிய பரிசுப் பொருள் கவருக்குள் விசில் ஒன்று இருந்துள்ளது. வீட்டின் அருகே வந்தபோது, `சித்தி இந்த விசிலை ஊதிக் காட்டவா' என்று என் சகோதரியிடம் கேட்டுள்ளான்.

சரியென்று சொன்னதும் அஸ்வின் விசிலை ஊதியுள்ளான். அப்போது அந்த விசில் தொண்டைக்குள் சென்றுவிட்டது. இதை எதிர்பார்க்காத என் சகோதரி பதற்றத்துடன் காரைக்குடி காவேரி மருந்துவமனைக்கு அஸ்வினை அழைத்துச் சென்றார். பல்வேறு பரிசோதனைகள் செய்தபோதும் விசிலை எடுக்க முடியவில்லை. பிறகு எண்டோஸ்கோபி முறையில் விசிலைக் கண்டறிந்து டியூப் மூலம் கிளிப் ஒன்றைப் பொருத்தி விசிலை வெளியே எடுத்தனர்.

வெளியே எடுக்கப்பட்ட விசில்
வெளியே எடுக்கப்பட்ட விசில்

டாக்டர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர் குலாம்பாட்ஷா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பல மணிநேர போராட்டத்துக்குப் பின் என் மகன் உயிரைக் காப்பாற்றினர். அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது.

மதியம் விழுங்கிய விசிலை இரவு 7:30-க்குதான் எடுக்க முடிந்தது. என் மகன் தவித்த ஒவ்வொரு நொடியும் தற்போது நினைத்தாலும் ஏற்கமுடியவில்லை. எனவே, என் குழந்தைக்கு நடந்ததுபோல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது. சிறிய அளவு பொருள்களை குழந்தைகளிடம் பெற்றோர்கள் கொடுக்காமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்றார் கலங்கியவாறு.

அடுத்த கட்டுரைக்கு