புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை அருகே உள்ள தொண்டைமான் நகரில் நகராட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குத் தினமும் 36 குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட மதிய உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்துத் தகவலறிந்து விரைந்துவந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தினரிடம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு குறித்து விளக்கம் கேட்டிருக்கின்றனர்.
இதற்கிடையே தகவலறிந்த சுகாதாரத் துறையினர் உடனடியாக அங்கு வந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர்களை மேல்சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, நேற்றைய தினம் மதிய சாப்பாட்டைச் சாப்பிட்ட 28 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து திருச்சியில் உள்ள ஆய்வகத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
சம்பந்தப்பட்ட அங்கன்வாடியில் வழங்கப்பட்ட பாசிப்பயற்றில் வண்டுகள் இருந்ததாகவும், தரமற்ற உணவால்தான் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட பெற்றோர்கள், அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மதிய உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆய்வு முடிவைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் நலமாக இருக்கின்றனர்" என்றனர்.
