Published:Updated:

`பாவு, நூல் தர்றதில்லை; வறுமையில வாடுறோம்!’ - கஞ்சித் தொட்டி திறந்த கைத்தறி நெசவாளர்கள்

கஞ்சித் தொட்டி
கஞ்சித் தொட்டி

`75 நாள்களுக்கு மேலாக நெசவு செய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகிறார்கள் கைத்தறி நெசவாளர்கள். சுமார் 400 நெசவாளர்கள் சேர்ந்து கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர்’.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கைத்தறிக்குப் பேர் பெற்றது. இங்கு உற்பத்தியாகும் சுங்குடி சேலை, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு 4,000 நெசவாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் கைத்தறி, சுங்குடி சேலைகள் தமிழகத்தின் முன்னணி துணிக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக நெசவு நெய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகிறார்கள் நெசவாளர்கள்.

கைத்தறிக்கூடம்
கைத்தறிக்கூடம்

சின்னாளபட்டியில், நம்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம், அஞ்சுகம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம், கமலாநேரு, அண்ணா, காந்திஜி, ம.பொ.சிலம்புசெல்வர் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், சித்தயன்கோட்டை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. சின்னாளபட்டியில் உள்ள 4,000 கைத்தறி நெசவாளர்களில் சுமார் 1,500 நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள 2,500 நெசவாளர்கள் தனியாரிடம் பட்டுநூல் வாங்கி நெசவு நெய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி கொரோனா ஊரடங்கு உத்தரவு முதல் இன்று வரை சுமார் 75 நாள்களாக நெசவு நெய்ய முடியவில்லை.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்குச் சங்க மேலாளர்கள், முறையாகப் பாவு மற்றும் நூல்களை வழங்குவதில்லை. இதனால் நெசவாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

கஞ்சித் தொட்டி
கஞ்சித் தொட்டி

இந்நிலையில் சின்னாளபட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள சுமார் 400 நெசவாளர்கள் மற்றும் அருகே உள்ள கமலாநேரு நெசவாளர் காலனி, ஜெ.ஜெ.காலனி, அஞ்சுகம் காலனி, ராஜகாளியம்மன் நகர், சித்தன்நகர், ஆகிய பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோயில் அருகே கஞ்சித் தொட்டி திறந்திருக்கிறார்கள். நெசவாளர்களிடம் வசூல் செய்து மொத்தமாகக் கஞ்சி காய்ச்சி நெசவாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

Vikatan

இதுகுறித்து பேசிய ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த சௌடேஸ்வரி நெசவாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கே.நாகராஜ்,``கூட்டுறவுச் சங்கங்களுக்கு நெசவாளர்கள் மேல் அக்கறை இல்லை. முறையாக நூல், பாவுகளை வாங்கித் தர்றதில்லை. இதனால கைத்தறி நெசவாளர்கள் தனியார் சேலை உற்பத்தியாளர்களிடம் அடிமை மாதிரி இருக்காங்க. நெய்து கொடுத்த சேலைக்கும் முறையா கூலி தர்றதில்லை.

கஞ்சித் தொட்டி
கஞ்சித் தொட்டி

இனிமே நெய்யுற சேலைகளுக்கும் கூலி குறைச்சுதான் தருவோம்னு சங்கத்துல மேனேஜர் சொல்றாங்க. நெய்ய நூல், பாவு கொடுக்குறதில்லை. இதனால வேலை இல்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். அவசரத்துக்கு ஆஸ்பத்திரி போகக்கூட கையில காசு இல்லை. ரொம்ப வறுமையா இருக்கு. சோற்றுக்கே வழியில்லை. அதனால தான் கஞ்சித்தொட்டி திறந்தோம். கலெக்டர் அம்மாதான், எங்க நலன்ல அக்கறைகாட்டி, முறையா பாவு, நூல் கொடுக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உத்தரவு போடணும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு