Published:Updated:

`இப்படியே போச்சுன்னா... சாகுறதைத் தவிர வேறவழியில்லை!'- கலங்கும் சுங்குடி நகரம்

கைத்தறி நெசவுக்கூடம்
கைத்தறி நெசவுக்கூடம்

ஊரடங்கால் சின்னாளபட்டி கைத்தறி, சுங்குடி நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சுங்குடி சேலை உலகளவில் பிரசித்திபெற்றது. இங்குள்ள எளிய மனிதர்களால் உருவாக்கப்படும் சேலைகள் உலகம் முழுவதும் பயணப்படுகின்றன. இன்றைய நிலையில் தமிழகத்தின் முன்னணி ஜவுளிக்கடைகளில் விற்பனையாகும் கைத்தறி சேலைகள், சுங்குடி சேலைகள், காட்டன் சுடிதார் ஆகியவை பெரும்பாலும் சின்னாளபட்டி தயாரிப்பாகத்தான் இருக்கிறது.

பிரிண்டிங் பட்டறைகள்
பிரிண்டிங் பட்டறைகள்

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாகச் சின்னாளபட்டியில் நெசவுத்தொழில் முடங்கிக்கிடக்கிறது. ஊரில் மெல்லிய சங்கீதமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும் தறிச்சத்தம் அடங்கியிருக்கிறது. பிரின்டிங் பட்டறைகள், கைத்தறி நெசவு பணிகள் இல்லாமல் சுருண்டுபோய் கிடக்கிறார்கள் நெசவாளர்கள். வியாபாரம், வேலை இல்லாததால் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த 30 நாள்களில் மட்டும் 10 கோடி ரூபாய் அளவிலான ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுங்குடி சேலைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. தினசரி 15,000 முதல் 20,000 சுங்குடி சேலைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தில் அனைத்து முன்னணி ஜவுளிக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

பூட்டியிருக்கும் நெசவாளர் சங்கம்
பூட்டியிருக்கும் நெசவாளர் சங்கம்

வழக்கமான காலங்களைவிட, கோடைக்காலத்தில்தான், சுங்குடி சேலைகளுக்குக் கஞ்சி ஏற்றி, வெயிலில் உலர வைத்து, உற்பத்தி செய்வார்கள். அதனால் வழக்கத்தைவிடக் கோடையில் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், இந்தக் கோடை வெயிலை நெசவாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பூட்டுகள் தொங்குகின்றன. பிரிண்டிங் பட்டறைகள், தறிக்கூடங்கள் பூட்டியே கிடக்கின்றன. வீடுகளில் தறிபோட்டு நெய்யும் நெசவாளர்களுக்குப் பாவு, சாயம் ஏற்றிய கலர் நூல், நாடா, மற்றும் தறி உபகரணங்கள் கிடைக்கவில்லை.

தறிக்கூடம்
தறிக்கூடம்

அதனால், அவர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பிரின்டிங் பட்டறைகளில் சேலைகள் பிரின்டிங் செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. ஜவுளிக் கடைகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சேலைகள் பண்டல் போடமுடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சுங்குடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து பேசிய மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் கே.ஆறுமுகம், ``தறியில உக்காந்து ஒரு மாசமாச்சு. ஒரு நாளைக்கு 800 ரூபாய் வரைக்கும் சம்பாதிப்பேன்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

இப்ப அதுக்கு வழியில்லாம வீட்டுலயே முடங்கிக் கிடக்குறோம். இப்படியே போச்சுன்னா எப்படி வாழ்றதுன்னே தெரியலை'' என்கிறார் சோகமாக.

ஜவுளி மற்றும் சுங்குடி உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த், ``சின்னாளபட்டியில 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேங்கி கிடக்கின்றன. இதே நிலைமை நீடித்தால் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும்'' என்கிறார்.

ஆனந்த்
ஆனந்த்

வள்ளுவர் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, ``சின்னாளபட்டியில மட்டும் 2,500 க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்கள் இருக்காங்க. மத்த தொழில் மாதிரி இல்லை. வழக்கமா சமூக விலகலோடு தான் வேலை நடக்கும். ஆனா, இப்ப நூல், பாவு (கலர் நூல்) கிடைக்காம முடங்கிப் போயிருக்கு. பழனி பக்கத்துல இருக்க கொழுமம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி பகுதியிலிருந்துதான் தறி உபகரணங்கள், நூல்கள் இங்க வரும். அதைக் கொண்டுவர, கைத்தறி நெசவாளர்களுக்கு நலவாரியம் மூலம் நிவாரண உதவி கொடுக்கணும்'' என்றார்.

இந்நிலையில், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சுங்குடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவது குறித்து அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார், தி.மு.க மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி. ``இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக இருக்கிறது கைத்தறி நெசவுத் தொழில். தற்போது ஊரடங்கு காரணமாகச் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு தொழிலும், சுங்குடி தொழிலும் முடங்கிவிட்டன.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

கைத்தறி நெசவாளர்கள், சுங்குடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நலவாரியம் மூலம் இவர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெசவாளர்கள் தறியில் நெய்வதற்குத் தேவையான நூல் உள்ளிட்ட பொருள்களைப் பூட்டி நெய்ய வெளிமாவட்டங்களிலிருந்து நூல் மற்றும் பாவுகள், நாடாக்கள் உட்படத் தறி உபகரணங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் வாகன வசதி மற்றும் அனுமதி வழங்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு