Published:Updated:

`கூகுளிலும் கிடைக்காத தகவல்கள்; OMR ஷீட்டில் தேர்வு'!- களைகட்டிய சுட்டி விகடன் `தூத்துக்குடி 200'

சுட்டிவிகடன், தூத்துக்குடி 200 அறிவுத்திறன் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சந்தீப் நந்தூரி -மாவட்ட ஆட்சியர்
சந்தீப் நந்தூரி -மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள், வரலாற்று நினைவுகள், முக்கியமான சுற்றுலாத் தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், துறைமுகம், உப்பளங்கள், தொழிற்சாலைகள், சிறப்பு உணவுகள், அகழாய்வு இடங்கள் குறித்த தகவல்களும், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், சுந்தர லிங்கம், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், உமறுப்புலவர் ஆகிய வரலாற்று நாயகர்கள், எழுத்தாளர்கள்.. உள்ளிட்ட 200 தகவல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்ற இன்போ புத்தகம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இத்தகவல்களிலிருந்து 75 கேள்விகள் கேட்கப்பட்டு, 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

ஆர்வத்துடன் மாணவர்கள், பெற்றோர்கள்
ஆர்வத்துடன் மாணவர்கள், பெற்றோர்கள்

இத்தேர்வில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமுள்ள 60 அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த, 16,000 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், 900 மாணவ, மாணவிகள் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று வெற்றிக் கேடயம் பெறத் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், சிறப்பு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயமும் வழங்கும் விழா, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது.

சுட்டி விகடன் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்திய இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணை பொது மேலாளர் மதிகரன்,

பரிசு பெறும் மாணவர்
பரிசு பெறும் மாணவர்

சிவகாசி, A.A.A பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சேகர், வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு, மற்றும் அபி குழுமங்களின் மேலாண் இயக்குநர் பொன் சீலன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், “நமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அக்டோபர் 20-ம் தேதி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நாளாகும். அதே நாளில் ”தூத்துக்குடி 200” என்ற இவ்விழா நடப்பது சிறப்பிற்குரியது. இந்த 200 தகவல்களின் மூலம் மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிற வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

பரிசு பெற்ற மாணவிகள்
பரிசு பெற்ற மாணவிகள்

இந்தத் தேர்வு, வழக்கமான எழுத்துத் தேர்வு போல அல்லாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி மற்றும் தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளப் பயிற்சி பெறும் வகையில் ஓ.எம்.ஆர் ஷீட்டில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பத்திரப்படுத்தி வைத்துப் படிக்க வேண்டிய புத்தகம் இது” என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், “எங்க அப்பா விகடனின் தீவிர வாசகர். நானும் அப்படியே விகடனின் வாசகரானேன். சுட்டி விகடன் இதழை நானும் படித்திருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் வளர்ச்சியில் சுட்டி விகடனின் பங்கு முக்கியமானது. கூகுளில் தூத்துக்குடியைப் பற்றித் தேடினாலும் கிடைக்காத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன'' என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி, ``படிக்க வேண்டும் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நினைப்பில் மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்கிறார்கள். பாடங்களுடன் சேர்த்து நமது பகுதியின் சிறப்புகளைப், பெருமைகளை, வரலாற்றுத் தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அரங்கு நிறைந்த மாணவர்கள்
அரங்கு நிறைந்த மாணவர்கள்

இதே மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய வகையில் கூடுதலான, அரிய தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது” என்றார். இவ்விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்… எனக்கும் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு ’சோலைவனம் பண்ணை’யின் சார்பில் பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.