Published:Updated:

`எனக்குப் பிரியாணி வேண்டாம்; துடைச்சுவிட்டா மண்ணு போயிடும்!’ - மக்களின் உணர்வுகளைப் பகிரும் நடிகர்

விக்ரம் ஜெகதீஷ்
விக்ரம் ஜெகதீஷ்

``இந்தப் பிரியாணியை பசியிலிருக்கும் வேறு யாருக்காச்சும் கொடுத்துங்க’ன்னு ஒருவர் சொன்னார். அவர் பிரியாணியை வாங்கி வெச்சிருந்து கொஞ்ச நேரம் கழிச்சுகூட சாப்பிட்டிருக்கலாம். ஆனா, அப்படிச் செய்யலை."

`வேட்டைக்காரன்’, `சிங்கம் புலி’ உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கும் நடிகர் விக்ரம் ஜெகதீஷ், `ஒண்டிக்கட்ட’ உள்ளிட்ட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். காய்கறி வியாபாரம் செய்யும் நண்பரின் உதவியுடன், சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுக்குக் காய்கறிகளை இலவசமாகக் கொடுத்துவருகிறார். இதற்காக தினமும் நான்காயிரம் கிலோ காய்கறிகளைக் கொடுக்கிறார். இதுகுறித்து விக்ரம் ஜெகதீஷிடம் பேசினோம்.

நண்பர்களுடன் விக்ரம் ஜெகதீஷ் (இடது புறத்தில்)
நண்பர்களுடன் விக்ரம் ஜெகதீஷ் (இடது புறத்தில்)

``கொரோனாவால் வேலைக்குப் போக முடியாம நிறைய மக்கள் சிரமப்படுறாங்க. வறுமையைக் கடந்துவந்த அனுபவத்துல மக்களுக்கு உதவலாம்னு நினைச்சேன். சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் நண்பர் செல்வராகன் உதவ முன்வந்தார். தினமும் மார்க்கெட்டுக்குப் போய் டெம்போவில் நாலாயிரம் கிலோ காய்கறி மூட்டைகளை ஏத்திப்பேன். தினமும் ஒவ்வொரு ஏரியாவுக்குப் போவேன். அங்குள்ள நண்பரிடம் முன்கூட்டியே பேசிவெச்சுடுவேன். அதன்படி அந்த நண்பரின் வீட்டுக்குக் காய்கறிகளைக் கொண்டுபோவேன். மூட்டைகளைப் பிரிச்சு, எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் வீதம் தனித்தனி கவரில் பேக் பண்ணுவோம்.

தகவல் தெரிவிச்சதும், ஏழை மக்கள் உடனே அங்கு வந்து குடும்பத்துக்கு ஒரு பை வீதம் வாங்கிட்டுப்போவாங்க. தவிர, ஏழை மக்கள் குடியிருப்புக்குப் போயும் காய்கறிகளைக் கொடுக்கிறேன். கடந்த ரெண்டு வாரமா இப்படித்தான் பலருக்குக் காய்கறிகள் கொடுத்திருப்பேன். டெம்போ வாடகை மற்றும் டிரைவர் செலவுகளை மட்டும் நானும், என் நண்பர்களும் செய்றோம். மத்தபடி காய்கறிகளுக்கு நண்பர் செல்வராகன் பணம் கேட்பதில்லை. ஆரம்பத்தில் அவருக்கு நான் கொஞ்சம் உதவியிருக்கேன். அதுக்கு கைம்மாறாவும், எதிர்காலத்தில் நான் நல்ல நிலைக்கு வருவேன்னு நம்பிக்கை வெச்சும் உதவறார்” என்கிற விக்ரம், கொரோனா விழிப்புணர்வுக்கு இரண்டு பாடல்களை வெளியிட்டிருக்கிறார். தினமும் 15 வகையான காய்கறிகளை மக்களுக்கு வழங்குகிறார். இதற்கு இதுவரை ஏழு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது.

காய்கறிகள்
காய்கறிகள்

``கொரோனா முடியும்வரை மக்களுக்குக் காய்கறிகள் கொடுப்போம். உதவ முன்வரும் நண்பர்களிடமும் காய்கறிகள் கொடுத்து மக்களுக்குக் கொடுக்கச் சொல்கிறேன். அதன்படி சில தினங்களுக்கு முன்பு நடிகர் தீனாவும் என்னிடம் மூவாயிரம் கிலோ காய்கறிகள் வாங்கிட்டுப்போய் மக்களுக்குக் கொடுத்தார். சில நண்பர்கள் ஏழை மக்களுக்கு உணவு தானம் செய்றாங்க. அதில் சில பொட்டலங்களை என்கிட்ட கொடுத்து சில ஏரியாவிலுள்ள மக்களுக்குக் கொடுக்கச் சொல்வாங்க.

அதன்படி புரசைவாக்கத்துல சில தினங்களுக்கு முன்பு சாலையோரத்தில் வசிக்கிற மக்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தேன். `நான் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் சாப்பிட்டேன். இந்தப் பிரியாணியை பசியிலிருக்கும் வேறு யாருக்காச்சும் கொடுத்துங்க’ன்னு ஒருவர் சொன்னார். அவர் பிரியாணியை வாங்கி வெச்சிருந்து கொஞ்ச நேரம் கழிச்சுகூட சாப்பிட்டிருக்கலாம். ஆனா, அப்படிச் செய்யலை.

காய்கறிகள்
காய்கறிகள்

இன்னொருத்தர் பசியில வேகமா சாப்பிடும்போது, சிக்கன் கீழ மண்ணுல விழுந்துடுச்சு. `துடைச்சுவிட்டா மண்ணு போயிடும்’னு அதை எடுத்துச் சாப்பிட்டார். இப்படி வறுமையிலுள்ள பலதரப்பட்ட மக்களைத் தினமும் சந்திக்கிறேன். பிரபல நடிகர்கள் மக்களுக்கோ அல்லது சிரமத்திலுள்ள சினிமா கலைஞர்களுக்கோ உதவ முன்வந்தால் பலரும் பயனடைவாங்க” என்று கோண்டுகோளுடன் முடித்தார் விக்ரம்.

அடுத்த கட்டுரைக்கு