Published:Updated:

'திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? திரையரங்குகளும் சில தளர்வுகளை அமல்படுத்துமா?!'- ஓர் அலசல்

திரையரங்குகள்
திரையரங்குகள்

ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுத்து கடைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளர்கள் கோரிக்கை மனுவுடன் முதல்வரைச் சந்திக்க இருக்கிறார்கள்.

இரண்டு வார முழு ஊரடங்கின் பயனாக கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துவிட்டது. அதனால், அந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், பெரிய நிறுவனங்கள், மால்கள் திறக்க அனுமதியில்லை. திரையரங்குகள் பற்றி அதில் குறிப்பிடப்படாததால், தனியாக செயல்படும் திரையரங்குகளை மட்டும் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் இரு நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த பிரச்னையுமில்லை, எனினும் சில விஷயங்களில் திரையரங்குகள் தளர்வுகளை அறிவிக்க வேண்டுமென சினிமா ரசிகர் ஒருவர் நம்மிடம் கூறினார். அவரிடம் பேசியபோது, “வீட்டில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மிகப்பெரிய டி.வி-யும், ஹோம் தியேட்டரும் பொருத்தினால் கூட திரையரங்கு செட்டப்புக்கு ஈடுகொடுக்க முடியாது. அதனால்தான் மக்கள் திரையரங்குகளை அதிகம் விரும்புகிறார்கள். அதிலும், நண்பர்களாக, குடும்பமாகச் செல்பவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டால் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. கொரோனா பரவல் காரணமாக 50 சதவிகித இருக்கைதான் நிரப்ப வேண்டும் என்பதால் ஒரு சீட் விட்டு ஒரு சீட்தான் மக்கள் அமரவைக்கப்படுகிறார்கள். இதுதான் பெரிய சிக்கலாக உள்ளது. எனினும், நல்ல படம் என்றால் தனித்தனியாகக் கூட மக்கள் பார்க்கத் தயார் என்பதால் வருகிறார்கள்.

Theatres | தியேட்டர்
Theatres | தியேட்டர்

எனினும் திரையரங்குகளை நடத்துபவர்கள் சிலவற்றில் தளர்வுகளைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக கொரோனா பரவலால் நேரில் சென்று எவரும் டிக்கெட் எடுக்கச் செல்லப்போவதில்லை. ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதையே விரும்புகிறார்கள். ஆனால், ஆன்லைன் டிக்கெட் வழங்கும் நிறுவனங்கள் ஒரு டிக்கெட்டுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் கூடுதல் பணம் வசூலித்து வருகிறது. இதனை இலவசமாகவோ அல்லது குறைந்தபட்சம் 5 ரூபாய் என்றோ நிர்ணயம் செய்திட வேண்டும். இதற்காக திரையரங்குகளை நடத்துபவர்கள், டிக்கெட் புக்கிங் நிறுவனங்களிடம் பேசித் தீர்வு காணவேண்டும். அடுத்து, பார்க்கிங் கட்டணம் ஏற்கனவே அரசால் வரையறை செய்யப்பட்டுவிட்டது. இருந்தபோதும் திரையரங்குகள் அதனை மதிப்பதில்லை. சில திரையரங்குகளைத் தவிர்த்து மற்றவை எல்லாம் இரு சக்கர வாகனத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு 10 ரூபாய் வீதம், 3 மணி நேரத்த்துக்கு 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். சில திரையரங்குகள் இந்த கொரோனா காலத்திலும் 50 ரூபாய் அளவுக்கு கட்டணம் வசூலித்தது. எனவே, இதனை அரசு சொன்ன விலைக்கு நிர்ணயம் செய்திடல் வேண்டும்.

அடுத்ததாக, டிக்கெட் கட்டணமும், இடைவேளையின்போது வாங்கிச்சாப்பிடும் திண்பண்டங்கள் கட்டணமும் எப்போதுமே அதிகமாகவே உள்ளன. நடுத்தர குடும்பத்துக்கு இதுக்கே 1000 ரூபாய் ஆகிவிடுகிறது. இங்குதான் ஓ.டி.டி தளங்கள் கால்பதிக்கின்றன. அதாவது, திரையரங்குகளில் ஒரு ஷோவில், ஒரு படத்தைப் பார்க்க நான்கு பேருக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலவாகிறது. அதுவே, ஓ.டி.டி-யில் 3 மாதத்துக்கு சேர்த்தே 329 ரூபாய்தான்.அதனால்தான் ஓ.டி.டி-யை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள். இதனை உடைத்து மீண்டும் திரையரங்குகள் பக்கம் மக்களை வரவழைக்க வேண்டுமென்றால், திரையரங்கு உரிமையாளர்கள் மேற்கண்ட விலைக் குறைப்பு தளர்வுகளை அமல்படுத்திட வேண்டும்” என்றார் தெளிவாக.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனிடம் கேட்டோம். "முதலில் அரசு என்ன சொல்கிறது எனப் பார்ப்போம். திரையரங்குகளைத் திறப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். மற்றபடி எதுகுறித்தும் நாங்கள் சிந்திக்கவில்லை. ஒன்றரை வருடங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டு கிடந்தபோது ஏற்பட்ட நஷ்டத்தை யார் ஈடுசெய்வது? எங்களுக்கும் மக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க முடியும். அதனால் முதலில் திறக்க அனுமதி கிடைக்கட்டும், அதன்பின் கண்டிப்பாக மக்களுக்காக என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ செய்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு