Published:Updated:

`வாசம் வீசும் வெட்டிவேர் மாஸ்க்; மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்!’ -சமூக ஆர்வலரின் அசத்தல் முயற்சி

வெட்டிவேர் மாஸ்க்குடன் நாகராஜன்
வெட்டிவேர் மாஸ்க்குடன் நாகராஜன்

காட்டன் துணி முகக்கவசத்திற்குள் வெட்டிவேரை அடைத்து, ’மூலிகை மாஸ்க்’ ஆக விற்பனை செய்துவருகிறார், விருதுநகரைச் சேர்ந்த நாகராஜன்.

விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டியைச் சேர்ந்தவர், நாகராஜன். இவர், `பசுமை இந்தியா’ என்ற அமைப்பின்மூலம் மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். இவர் தயார் செய்துள்ள வெட்டிவேர் மாஸ்க் குறித்து நாகராஜனிடம் பேசினோம், “பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுவருகின்றன. மரங்களின் எண்ணிக்கை குறைவதால் மழைப்பொழிவும் குறைந்துகொண்டேவருகிறது. மரம் வளர்த்தல் மற்றும் மழைநீர் சேமிப்பு, விதைப்பந்து தயாரித்தல் குறித்து பல விழிப்புணர்வுகளை மாணவர்கள், பொது மக்களிடையே ஏற்படுத்திவந்தேன்.

வெட்டிவேர் நிரப்பும் நாகராஜன்
வெட்டிவேர் நிரப்பும் நாகராஜன்

மரப்பென்சிலுக்குப் பதிலாக செய்தித்தாள்களில் பென்சில் தயாரித்தேன். இப்பென்சில்களின் அடிப்பாகத்தில் காய்கறிகள், கீரைகள், மரப்பயிர்களின் விதைகளை வைத்து தயார் செய்தேன். இதனால், பென்சிலின் பயன்பாடு முடிந்ததும் அதை தூக்கி எரியும்போது, தானாக முளைத்துவளரும். அதேபோல பிளாஸ்டிக் பேனாவின் கூட்டுக்குப் பதிலாக பேப்பரிலேயே பேனா தயார் செய்தேன். உள்ளே உள்ள ரீஃபிள் மட்டும் பிளாஸ்டிக். இதில் 80 சதவிகித பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் முடிந்த பிறகு, அந்தத் திருமண அழைப்பின் லைஃப் முடிந்துவிடும். அதன்பிறகு கிழித்துப் போட்டுவிடுவார்கள். நான் தயாரித்த அழைப்பிதழ்களின் ஓரங்களில் விதைகளை வைத்து ஒட்டிவிடுவதால், அழைப்பிதழ்களை அப்படியே தூக்கி வீசினாலும் அதிலுள்ள விதைகள் முளைத்து வளரும். தற்போதைய கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது அரசு.

வெட்டிவேர் மாஸ்க்
வெட்டிவேர் மாஸ்க்

இந்நிலையில், சுவாசக்கோளாறு உள்ளவர்கள், முதியவர்கள் மாஸ்க் அணிவதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு முகக்கவசத்தில் வெட்டிவேர் நிரப்பி, மூலிகை மாஸ்க்காகத் தயார்செய்துள்ளேன். இரண்டு அடுக்காகத் தைக்கப்பட்ட காட்டன் துணி முகக்கவசத்தின் நடுவில், அந்தப் பைக்குள் 5 கிராம் அளவு வெட்டிவேர் நிரப்பி, அப்படியே மாஸ்க்காக போட்டுக்கொள்ளலாம்.

3 நாட்கள் வரை இந்த மாஸ்க்கை தொடர்ந்து போட்டுக்கொண்டு வந்து, பின்னர் வெட்டிவேரை நீக்கிவிட்டுத் தண்ணீரில் அலசிக் காயவைத்து, மீண்டும் மீண்டும் புதிய வெட்டிவேரை இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு மாஸ்க்குடனும் 4 முறை பயன்பாட்டிற்குத் தேவையான வெட்டிவேரையும் இணைத்தே கொடுக்கிறேன். துவைக்கும் முன் வெட்டிவேரை எடுத்து ஈரமாக்கி, உதறி தனியே வைக்க வேண்டும். பிறகு, மாஸ்க்கை துவைத்துக் காயவைத்து, மீண்டும் வெட்டிவேரைப் போட்டு பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் மாஸ்க்
வெட்டிவேர் மாஸ்க்

ஒரு வெட்டிவேர் மாஸ்க்கின் விலை ரூ.25. உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. முதியவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் தண்ணீரில் வெட்டிவேரைப் போட்டு குடித்தாலும் உடலுக்கு நல்லது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு