Published:Updated:

`காவலர் குடியிருப்பில் மதுவிற்பனை; மோதிக்கொண்ட சென்னைக் காவலர்கள் - வீடியோவால் சிக்கிய பின்னணி

மோதிக்கொள்ளும் காவலர்கள்
மோதிக்கொள்ளும் காவலர்கள்

சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் மதுவிற்பனை நடப்பதாகக் காட்டிக்கொடுத்த முன்விரோதத்தில் காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகிவருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற தகராறு காரணமாகக் காவலர்கள் மோதிக்கொள்வதாக டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சென்று விசாரித்தனர். அப்போது மோதலில் ஈடுபட்ட காவலர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் கள்ளச்சந்தையில் மது விற்ற காவலர்கள் தன்னை தாக்கியதாகக் கூறி தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ் என்பவர் புகாரளித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

`ஒரே பில்லில் ரூ.95,000; 52,000 ரூபாய்க்கு மதுவிற்பனை!’ - ரூ.45 கோடி வசூல் செய்த கர்நாடகா
காவலர்கள் மோதிக் கொள்ளும் காட்சி
காவலர்கள் மோதிக் கொள்ளும் காட்சி

தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறேன். தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளேன். வேப்பேரி இன்ஸ்பெக்டர் அனுமதியோடு உடல்நலம் சரியில்லாத என் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வந்தேன். குடிபோதையிலிருந்த நுண்ணறிவுப் பிரிவு காவலர் கார்த்திக் என்னிடம் தகராறு செய்தார்.

அதை நான் தட்டிக்கேட்டபோது என்னை அவர் தாக்கினார். உடனே டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தேன். தகவல் கிடைத்ததும் ரோந்து போலீஸார் அங்கு வந்தனர். அதற்குள் என்னை அவர் தாக்கினார். அதில் எனக்கு காயம் ஏற்பட்டது. மேற்படி காவலர் கார்த்திக் மற்றும் காவலர் ஜான்பிரிட்டோ இருவரும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுவந்ததை நான் தட்டிக்கேட்டதால்தான் என்னைத் தாக்கியுள்ளனர். காவலர் குடியிருப்பு என்றுகூட பாராமல் மதுபானங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமைக் காவலரின் புகார் மனு
தலைமைக் காவலரின் புகார் மனு
Vikatan

இதற்கிடையில் தலைமைக்க காவலர் வெங்கடேஷ்வர ராவ் மீது காவலர்கள் கார்த்திக், ஜான்பிரிட்டோ தரப்பினரும் புகாரளித்துள்ளனர். அதன்பேரிலும் டி.பி.சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. அந்த வீடியோ அடிப்படையிலும் போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,``டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலர்கள் மோதிக் கொண்ட வீடியோ குறித்து விசாரணை நடந்துவருகிறது. இரண்டு தரப்பிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் விசாரணை நடத்திவருகிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ், தற்போது வேப்பேரி இன்ஸ்பெக்டரிடம் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். கார்த்திக் என்ற காவலர் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றுகிறார்.

மருத்துவமனையில் தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ்
மருத்துவமனையில் தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ்

காவலர் ஜான்பிரிட்டோ, போலீஸ் உயரதிகாரி ஒருவரின் வீட்டில் பணியாற்றுகிறார். சென்னை கோட்டூர்புரம் உதவி கமிஷனரிடம் டிரைவராகப் பணியாற்றிய தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ், மனித நேய சேவையில் ஈடுபட்டு காவல்துறை உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெற்றவர். காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் மதுவிற்பனை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தியபிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ்விடம் கேட்டதற்கு, ``நுண்ணறிவு பிரிவு காவலர் கார்த்திக் என்கிற கார்த்திக்கேயன், காவலர் ஜான்பிரிட்டோ ஆகிய இருவர் சேர்ந்து காவலர் குடியிருப்பிலேயே கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை உயரதிகாரிகளின் விசாரணையின்போது சமர்பிப்பேன். என் மீதான எஃப்.ஐ.ஆர்களை விசாரித்தாலே உண்மைகள் தெரியவரும்" என்றார்.

காவலர் கார்த்திக்கேயன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``தலைமைக் காவலர் வெங்கடேஷ்வர ராவ் மீது அம்பத்தூர், குன்றத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் நாங்கள் மதுவிற்கவில்லை. தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை வெங்கடேஷ்வர ராவ் கூறிவருகிறார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு