ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருபவர் சுரேஷ் (43). இவரின் நண்பரான ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய கல்யாணசுந்தரம், அலட்சியமாகப் பணியாற்றியதாக சமீபத்தில் பவானிசாகர் போலீஸ் ஸ்டஷனுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு தலைமைக் காவலர் சுரேஷ் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள ஃபைனான்ஸியரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். சுரேஷ் வாங்கிய கடனுக்காக நண்பர் கல்யாணசுந்தரம், ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். குமாரபாளையத்திலுள்ள ஃபைனான்ஸியரைப் பார்த்து, பணம் கொடுக்காமல் கால தாமதம் ஆனதால், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு அது குறித்துப் பேசுவதற்காக தலைமைக் காவலர்கள் சுரேஷும் கல்யாணசுந்தரமும் சென்றனர்.

அப்போது சுரேஷுக்கும், கல்யாணசுந்தரத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சுரேஷிடமிருந்த வாக்கி டாக்கியைப் பிடுங்கி கல்யாணசுந்தரம் அங்கிருக்கும் வாய்க்காலில் தூக்கி எறிந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து சுரேஷ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி இருவரும் சமாதானமாகப்போவதாக எழுதிக் கொடுத்தனர்.
இந்தத் தகவல், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்குத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய அவர், தலைமைக் காவலர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம் இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.