Published:Updated:

`17 பேர் உயிரைப் பறித்த சுற்றுச்சுவர்!' - மேட்டுப்பாளையத்தில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. நேற்று அதிகாலை சிவசுப்ரமணியத்தின் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

முதல்வர், அமைச்சர்கள்
முதல்வர், அமைச்சர்கள்

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் இன்று மேட்டுப்பாளையம் வந்தனர். விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்தது குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர். இந்த விபத்தில் பலியான 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

`இனி இழப்பதற்கு எதுவுமில்லை!'- மேட்டுப்பாளையம் துயரத்திலும் பிள்ளைகளின் கண்களைத் தானம் செய்த தந்தை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ``மேட்டுப்பாளையத்தில் நேற்றைய தினம் 18 செ.மீ மழை பெய்திருக்கிறது. அதன் காரணமாக நடூர் பகுதியில் இருந்த மூன்று வீடுகளின் மீது அருகில் இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டனர். 17 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையானது. அவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர், அமைச்சர்கள்
முதல்வர், அமைச்சர்கள்

அந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சமும் வழங்கப்படும். மொத்தம் 10 லட்சம் வழங்கப்படும். அவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தகுதியுள்ள ஒருவருக்கு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றார்.

`15 பேர் மரணத்துக்குக் காரணமான 80 அடிநீள சுற்றுச் சுவர்!’- அதிர்ச்சி விலகாத மேட்டுப்பாளையம்

அப்போது முதல்வரிடம், `சுற்றுச்சுவர் எழுப்பியது நவீன தீண்டாமையா?' எனக் கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதிலளித்தார். `இந்தச் சுவர் தொடர்பாக அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை' என அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். இதுதொடர்பாகவும் முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்தவர், `இதுதொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் வருகையையொட்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களுடன் குவிந்திருந்தனர். முதல்வர் அவர்களுக்கு வணக்கம் வைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த மக்கள், `எங்களின் கோரிக்கைகளை கேட்காமல் அப்படியே செல்கிறீர்களே?' என்றனர். `எங்களுக்காக போராடியவர்களைக் கைது செய்தது ஏன். அவர்களை விடுவிக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டார்.