கொரோனா: `வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவால்!’ - முதல்வர் பழனிசாமி

``இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால், நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகிறது.”
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, சென்னை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை கிண்டியில் அனைத்து வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.

சுமார் ரூ.136 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான அதிநவீன வசதிகளுடன் உள்ளதாகவும் நோயாளிகளின் மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான வசதிகள் உட்பட பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ``சென்னை மாநகரில் ஊரடங்கின் மூலமாகப் படிப்படியாக வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. எனவே, அரசு எடுத்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. பலன் என்பது படிப்படியாகத்தான் கிடைக்கும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாகக் கடந்த இரண்டு நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நோயைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், ``எல்லோரும் இருக்கும் இடத்தில் நோய் பரவினால்தான் சமூகப் பரவல். வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு அறிகுறி உள்ளதா என்பதை சோதனையிட்டு வருகிறோம். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால், நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகிறது. அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ``கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய அதேநேரம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவால். இது அரசின் கடமை. எனவே, முழுமையாக ஊரடங்கை பிறப்பித்துக்கொண்டிருக்க முடியாது. 100 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு தொடர்கிறது. இதனால், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, இன்னொரு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை. அரசின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம்” என்று பேசினார்.