Published:Updated:

தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி, சிக்கன் ஃப்ரை.. 13 நாள்களாக அசத்தும் கோவை கூட்டுறவு சங்க தலைவர்

பிரியாணி
பிரியாணி

கோவையில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஒருவர், ஆதரவற்றோர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி, சிக்கன் ஃப்ரை வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பில், தமிழகத்திலேயே கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போதுவரை, கோவையில் 60 பேருக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. என்னதான் பாதிப்பு அதிகம் என்றாலும், மனிதம் போற்றும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் கோவையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏற்கெனவே, அரசுடன் கைகோத்து பல நல உள்ளங்கள் ஆதரவற்ற மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

கோவை
கோவை

கொரோனா சிகிச்சையளிக்க பலரும் தங்களது இடத்தை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்து வருகின்றனர். அதேபோல, கூலித்தொழிலாளர்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி பல்வேறு நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிலையில், சௌரிபாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னசாமி தொடர்ந்து 13 நாள்களாக ஆதரவற்ற மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். முக்கியமாக, 13-வது நாளான நேற்று பிரியாணி மற்றும் சிக்கன் ஃபிரை வழங்கப்பட்டது.

பிரியாணி
பிரியாணி

கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அந்த உணவு வழங்கப்பட்டது. மிகவும் திருப்திகரமாக சாப்பிட்டுவிட்டு, நெகிழ்ச்சியுடன் அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து சின்னசாமி கூறுகையில், ``ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, இலவசமாக உணவு வழங்க வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டோம். முதலில் ஆதரவற்ற மக்களுக்கு மட்டும் உணவு வழங்கினோம். பிறகு, தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கலாம் என்று தோன்றியது. ஒரே உணவாக கொடுத்தால், சாப்பிடுவோருக்கு கஷ்டமாக இருக்கும்.

பிரியாணி, சிக்கன் ஃப்ரை
பிரியாணி, சிக்கன் ஃப்ரை

எனவே, 10-வது நாளில் நாட்டுக்கோழி பிரியாணி மற்றும் நாட்டுக்கோழி ஃபிரை வழங்கினோம். தற்போது, மீண்டும் பிரியாணி, சிக்கன் ஃப்ரை வழங்கினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை ஆதரவற்ற மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்குவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு