Published:Updated:

`அம்மாவுக்குக் காது சரியாகக் கேட்காது!' -கோவை மூதாட்டியைக் கலங்கவைத்த ரூ.33,000 செல்லாத நோட்டுகள்

கோவையில், 92 வயது மூதாட்டி ஒருவர் பழைய ரூபாய் நோட்டுகளைச் சேமித்து வைத்த தகவல் தெரியவந்துள்ளது.

கமலம்மாள்
கமலம்மாள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த நடவடிக்கையின் தாக்கம் இப்போதும் எளிய மக்களை வதைத்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்ற மூதாட்டியும் இன்னொரு மூதாட்டியும் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனின் முயற்சியால் அந்த மூதாட்டிகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது.

பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு

இதில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி உயிரிழந்துவிட்டார். தற்போது, செல்லாத நோட்டுகளால் கோவையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

கோவை கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். வயது 92. இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

கமலம்மாள்
கமலம்மாள்

கமலம்மாள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை பீரோவில் வைத்துள்ளார். அந்த வகையில் ரூ.33,000 பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், அவையெல்லாம் செல்லாக் காசு என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நோட்டுகள்.

`என்ன நடந்தது?' என்று கமலம்மாளின் மகன் கோபாலிடம் பேசினோம், ``வயதாகிவிட்டதால் அம்மாவுக்குச் சரியாக காது எல்லாம் கேட்காது. பணமதிப்பிழப்பு நேரத்தில், நாங்கள் வெளியூரில் இருந்தோம்.

கமலம்மாள்
கமலம்மாள்

அம்மாவிடம் இதுப்பற்றிச் சொன்னபோது, ‘என்கிட்ட எங்கடா பணம் இருக்கு. எதுவும் இல்ல’ என்று சொன்னார். இதனால், அப்போது நாங்களும் விட்டுவிட்டோம்.

பிறகு ஒருநாள் பீரோவைச் சுத்தப்படுத்தியபோதுதான் பணம் இருப்பது எங்களுக்குத் தெரிந்தது. ஒரு புடவைக்குக் கீழ்தான் இந்தப் பணம் அனைத்தும் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு, ‘எனக்கு அது ஞாபகமே இல்ல சாமி’ என்றார்.

கமலம்மாள்
கமலம்மாள்

நாங்களும் பல இடங்களில் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இது அவர் சிறுகச் சிறுக சேமித்த பணம். எனவே, அரசுதான் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வேதனையான குரலில்.