Published:Updated:

கோவை: `ரயில் விபத்திலிருந்து யானைகளைக் காக்க இதுதான் வழி!' - சமூக ஆர்வலரின் ஆலோசனை

யானை
யானை

கோவை - பாலக்காடு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் இறந்த விபத்துகள் அனைத்தும் இரவில்தான் நடந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

கோவை - பாலக்காடு ரயில் வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிகப்படியாக இயங்குவதாலும், அதிவேகத்துடன் இயங்குவதாலும் யானைகள் ரயில் தண்டவாளத்தில் குறுக்கிடும் போது மோதி உயிரிழக்க நேரிடுகிறது.

யானை
யானை

இந்நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோவை - பாலக்காடு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு பாலக்காடு ரயில்வே மூத்த கோட்ட பொறியாளர் அனந்தராமன் அளித்த பதிலில், ``போத்தனூர் பாலக்காடு ரயில் வழித்தடத்தில், ஏ லைனில் மதுக்கரை முதல் சுள்ளிமடை ரயில் நிலையம் வரை 17 கி.மீ காப்புக் காடுகள் வழியாகச் செல்கிறது. பி லைனில் மதுக்கரை முதல் கஞ்சிக்கோடு வரை 23 கிமீ காப்புக் காடுகள் வழியாக ரயில் வழித்தடம் செல்கிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு விபத்தைத் தவிர அனைத்து யானை உயிரிழப்புகளும் ஜூன் முதல் டிசம்பர் மாத சீஸனில் மட்டுமே நடைபெற்றுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம்

3 விபத்துகள் இரவு 11 மணி அளவிலும், 2 விபத்துகள் இரவு 1 மணி அளவிலும், இரு விபத்துகள் முறையே 5 மற்றும் 6 மணி அளவிலும் நடைபெற்றுள்ளன. ஒரு விபத்து நடைபெற்ற நேரம் தெரியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், ``போத்தனூர் பாலக்காடு இடையே ரயில் மோதி யானைகள் இறந்த விபத்துகள் அனைத்தும் இரவு நேரங்களில்தான் நடந்துள்ளன. வாளையார் மற்றும் எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 3 கி.மீ தூரத்துக்குள் 4 விபத்துக்கள் ஏற்பட்டு, 4 யானைகள் உயிரிழந்துள்ளன. 11 கி.மீ நீளமுள்ள இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிதான் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன.

கோவை - பாலக்காடு ரயில் வழித்தடம்
கோவை - பாலக்காடு ரயில் வழித்தடம்

பி லைனில் இரவுநேர போக்குவரத்தை நிறுத்துவது மட்டும்தான் இதற்கு தீர்வாக முடியும். ஏ லைனில் இரு திசைகளிலும் ரயில்களை இயக்கும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால், அதிக விபத்து அபாயம் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையே பி லைனில் போக்குவரத்தை இரவு நேரத்தில் நிறுத்தி, ஏ லைன் வழியாக இயக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு