Published:Updated:

கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு! -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர்

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, இன்ஸ்பெக்டர் சாஸ்தா
எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, இன்ஸ்பெக்டர் சாஸ்தா

கோவை அ.தி.மு க எம்.எல்.ஏ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு செலவை ஏற்றுள்ளனர்.

நீட் தேர்வால், மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது வருவதாக புகார் எழுந்தது. கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இந்நிலையில், நடப்பாண்டு, மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை
நீட்: `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 8 சீட்; இட ஒதுக்கீடு நிறைவேறினால் 303 சீட்' - உண்மைநிலை என்ன?

இந்நிலையில், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்க முன் வரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரின் மருத்துவப் படிப்புக்கான செலவை ஏற்றுள்ளார். அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த கோகுலன் என்ற மாணவன் மற்றும் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுக்கும் அசோகபுரம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆறுக்குட்டி இன்று வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி

மாணவன் கோகுலன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி ஜீவா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இருவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கோகுலன் மற்றும் ஜீவா கூறும்போது, “நாங்கள் அரசின் நீட் பயிற்சியில் தான் தேர்வுக்கு தயாரானோம். எங்களுடைய மருத்துவர் கனவு நிறைவேறுமா, என்ற சந்தேகம் இருந்து வந்தது. காரணம், எங்கள் வீட்டில் பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. நாங்கள் சிறிய வயதில் இருந்தே அரசுப் பள்ளியில் தான் படித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் எங்களுடைய மருத்துவ கனவு நிறைவேறாமலே போயிருக்கும்.

எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியால் என் கனவு நிறைவேறியுள்ளது. முதல்வருக்கும், எம்.எல்.ஏ-வுக்கும் நன்றி, எங்களைப் போன்ற வாய்ப்பு கிடைத்த அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் உதவ அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும்” என்றனர்.

மாணவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறுகையில், “அரசுப்பள்ளிகளுக்கு எங்களது ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். எனக்கு அரசுப் பள்ளி மாணவர்களை மிகவும் பிடிக்கும். நான் உதவி செய்துள்ள 2 அரசுப் பள்ளிகளுமே ஏராளமான சாதனைகளை செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி
எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

இடஒதுக்கீடு அறிவிப்பு வந்த உடனே, மாணவர்களின் கல்வி செலவை ஏற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். என் மனதுக்கு தோன்றியது அதனால் செய்தேன். தொடர்ந்து, அந்த மாணவர்களுக்கும், இதுபோல உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

இதேபோல, கோவை போலீஸ் ஒருவர், மாணவர் ஒருவரின் மருத்துவப் படிப்பு செலவை ஏற்க முன்வந்துள்ளார். இதுகுறித்து கோவையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சோமசேகரன் தனது முகநூல் பக்கத்தில், “அரசுப் பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவ மாணவிகளின் கல்வி கட்டணத்தை நடிகர்கள் அரசியல்வாதிகள் வழக்கறிஞர்கள் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை.

இன்ஸ்பெக்டர் சாஸ்தா
இன்ஸ்பெக்டர் சாஸ்தா

ஒரு அரசுப் பள்ளி மாணவரின் அரசு மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை நான் ஏற்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். கல்லாமை இல்லாமை ஆக்குவோம். உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ள: 9655209000” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு