Published:Updated:

`இப்படி உதவி பண்ணுவாருன்னு நினைக்கல தம்பி!' - கனகா பாட்டியை நெகிழவைத்த கோவை வழக்கறிஞர்

அந்தப் பகுதியில் ஏராளமான உயர் ரக ஹோட்டல்கள் இருந்தாலும், கனகா பாட்டியின் கையேந்தி பவனுக்கு தனிச்சுவை உண்டு.

கனகா பாட்டி
கனகா பாட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே செல்பவர்களுக்கு, கனகா பாட்டியை நன்கு தெரிந்திருக்கும். தள்ளாடும் வயதிலும், உறுதியான நெஞ்சோடு முகத்தில் சிரிப்புமாறாமல் உணவு பரிமாறுவார். அந்தப் பகுதியில் ஏராளமான உயர்ரக ஹோட்டல்கள் இருந்தாலும், பாட்டியின் கையேந்தி பவனுக்கென்று தனிச்சுவை உண்டு.

கனகா பாட்டி
கனகா பாட்டி

இந்தக் கடைக்கு நீண்ட நாள்களாகச் செல்பவர்களுக்குத்தான் கனகா பாட்டியின் சோகமும் தெரியும். கனகா பாட்டிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது.

ஆனால், மகன் உயிரிழந்துவிட்டார். இதனால், தன் மகனின் குழந்தைகள் இருவரையும் கனகா பாட்டிதான் சுமந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ஶ்ரீதர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனகா பாட்டியின் கடைக்குச் சாப்பிட வந்துள்ளார்.

கனகா பாட்டி
கனகா பாட்டி

சுவையில் அசந்து போன அவர், கடை சற்று சேதமடைந்து, அசுத்தமாக இருப்பது குறித்து கனகா பாட்டியிடம் கேட்டுள்ளார். `வர்ற வருமானம் எல்லாம் செலவுக்கே சரியா இருக்கு. இப்போதைக்கு கடையைப் புதுப்பிக்க முடியாது சார்' என்று கூறியுள்ளார். பாட்டியின் இந்தநிலை பாலாஜி ஶ்ரீதரின் மனதை வெகுவாக பாதித்துவிட்டது. அடுத்தநாள் மாலை பாட்டியைச் சந்தித்து, `உங்களுக்குப் புதிதாக ஒரு கடை அமைத்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்டுள்ளார். `உங்களுக்கு எதுக்கு சாமி சிரமம்?’ எனக் கேட்டுவிட்டு, அரைமனதுடன் சம்மதித்துள்ளார்.

இதனால் உற்சாகமடைந்து, உடனடியாக பணிகளைத் தொடங்கினார் பாலாஜி. நேற்று மாலை எப்போதும்போல பழைய வண்டியில் சமைத்துக்கொண்டிருந்தார் கனகா பாட்டி. அப்போது மினி டோர் வாகனத்தில் புதிதாக ஒரு தள்ளுவண்டி வந்திறங்கியது.

புதிய தள்ளுவண்டியுடன் கனகா பாட்டி
புதிய தள்ளுவண்டியுடன் கனகா பாட்டி

கூடவே, பாலாஜி ஶ்ரீதரும் வந்தார். `உடனடியாக உதவி செய்வார்' என எதிர்பார்க்காத கனகா பாட்டி சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார்.

கனகா பாட்டியிடம் பேசினோம். ‘‘1982-ம் வருஷத்துல இருந்து தள்ளுவண்டி கடை நடத்திட்டு வர்றேன். என் வீட்டுக்காரர் இறந்து 20 வருஷம் ஓடிடுச்சு. என் குழந்தைகளை வளர்த்து கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். எட்டு வருஷத்துக்கு முன்னாடி மகனும் செத்துப் போயிட்டான். அவனுக்கு ஒரு பையனும் பொண்ணும் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன். பேத்தியை இந்த வருஷம் காலேஜுல சேர்த்துட்டேன்.

கனகா பாட்டி
கனகா பாட்டி

பேரன் 11-ம் வகுப்பு படிக்கறான். அவங்க ரெண்டு பேரையும் கரை சேர்க்கணும். எல்லாரையும் போலத்தான் பாலாஜி சாரும் சாப்பிட வந்தார். ஆனா, இப்படியொரு உதவியைச் செய்வாருன்னு கனவுல கூட நினைக்கல தம்பி" என்றார் கலங்கிய கண்களுடன்.

வழக்கறிஞர் பாலாஜி ஶ்ரீதரிடம் பேசினோம். ‘‘பாட்டியின் கடையில் இட்லியும் தோசையும் அருமையான சுவையில் கிடைக்கும். ஆனால், கடையின் நிலை சற்று மோசமாக இருந்தது. பாட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். உதவியை தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டும். மேலும், இன்று (செவ்வாய்கிழமை) என் தந்தையின் நினைவு நாள்.

பாலாஜி ஶ்ரீதர்
பாலாஜி ஶ்ரீதர்

இதனால், உடனடியாக வண்டி வாங்கிக் கொடுத்துவிட்டேன். இதில், சாப்பிட்ட தட்டுகளை தனியாகப் போட மூன்றடுக்கு டேபிள் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில், இந்த வண்டியிலேயே மொபைல் வாஷ் பேஸின் ஒன்றையும் வடிவமைத்துள்ளோம்.

எனவே, கடை இனி சுவையுடனும் சுகாதாரத்துடனும் இருக்கும். என் தந்தையின் நினைவு நாளில், அவரது நினைவாக, பாட்டியின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக இதை நன்கொடையாக கொடுத்துள்ளோம்" என்றார் இயல்பாக.

கனகா பாட்டி
கனகா பாட்டி

இதைவிட ஆச்சர்யம், நேற்று கனகா பாட்டி கடையில் சாப்பிட்ட யாரிடமும் காசு வாங்கப்படவில்லை. தந்தையின் நினைவுதினம் என்பதால் அந்தச் செலவையும் பாலாஜி ஶ்ரீதரே ஏற்றுக் கொண்டார்.