Published:Updated:

காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கு முன்பு நடந்த சம்பவம்! - கோவை அன்னூர் வழக்கில் திருப்பம்

கோவை அன்னூர் அருகே கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலில் விழுந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் விவசாயியைத் தகாத வார்த்தையில் திட்டித் தாக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்ற விவசாயி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குச் சென்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காலில் விழும் காட்சி
காலில் விழும் காட்சி
``கோவை மாவட்டத்தில் 3-ம் அலை பாதிப்பு அதிகமாக இருக்கும்!'' - எச்சரிக்கும் அதிகாரிகள்; என்ன காரணம்?

மேலும், கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த முத்துசாமியை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த கோபால்சாமி சாதியைச் சொல்லித் திட்டியதால் இந்தச் சம்பவம் நடந்ததாக முதலில் தகவல் வெளியானது.

இதையடுத்து, கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

கோபால்சாமி
கோபால்சாமி

முத்துசாமியை விவசாயி கோபால்சாமி சாதிரீதியாகப் பேசியதாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காவல்துறைக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து, விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில், கிராம உதவியாளர் முத்துசாமி, அலுவலகத்தில் வைத்து கோபால்சாமியைத் தகாத வார்த்தையில் பேசித் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

முத்துசாமி
முத்துசாமி

இது குறித்து ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்துள்ள புகாரில், ``தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை வேறு ஒருவருக்கு முறைகேடாக மாற்றம் செய்தது தொடர்பாக கோபால்சாமி கேட்டிருக்கிறார். அப்போது, முத்துசாமி தரக்குறைவான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி கோபால்சாமியைத் தாக்கியிருக்கிறார். இதில் கோபால்சாமி கீழே விழுந்திருக்கிறார்.

முத்துசாமி தாக்கும் காட்சி
முத்துசாமி தாக்கும் காட்சி

பிறகு வெளியிலிருந்து சிலர் வழங்கிய திட்டப்படி, தன்னை சாதியைச் சொல்லித் திட்டுவதாக முத்துசாமி காலில் விழுந்து அழுதிருக்கிறார். எனவே, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முத்துசாமி கொடுத்த புகார்களை ரத்து செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

டெல்லி க்ரைம் ரிப்போட்டர் என்ற போலி பத்திரிகையாளரின் வழிநடத்துதலின் பேரில், முத்துசாமி நாடகமாடியது தெரியவந்திருக்கிறது. இந்த வீடியோவைவைத்து பேரமும் பேசியுள்ளனர். முதற்கட்டமாக, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, முத்துசாமி இருவரும் பணியிடம் மாற்றம் செய்து, சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளனர்.

கோபால்சாமி முத்துசாமி
கோபால்சாமி முத்துசாமி

மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அன்னூர் போலி பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு