Published:Updated:

`இந்த வருமானமே எனக்குப் போதும்..!' - பயணிகளுக்கு இலவச மாஸ்க் கொடுத்து அசத்தும் கோவை ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்
ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்

கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காகத் தன் பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஸ்தம்பிக்க வைக்க, மறுபுறம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு மாறிவிட்டன.

ஆட்டோ  ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்
ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்

`முடிந்த அளவுக்குப் பயணங்களைத் தவிருங்கள்' என்பதுதான் அனைத்துத் தரப்பில் இருந்து வரும் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால், எல்லோராலும் எல்லா சூழ்நிலையிலும் வீட்டில் இருப்பது சாத்தியமில்லை என்பதே எதார்த்தம்.

அப்படி வெளியில் வருபவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத் (31). செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா, தனது ஆட்டோக்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக இலவசமாக மாஸ்க் வழங்கி வருகிறார்.

மாஸ்க்
மாஸ்க்

மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதைப் பதுக்கி வைத்து பணம் பார்க்கும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், ராகவேந்திராவின் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கொரோனா தாக்கிய பயணிகள்... தடுமாறிய கப்பல்... கியூபா அரசு காட்டிய `மனித நேயம்'!

இதுகுறித்து ராகவேந்திர பிரசாத்திடம் பேசியபோது, ``9-ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். ஓலாவுடன் இணைந்து ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கேன். மக்கள் மூலமாதான் நான் சம்பாதிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவங்க பாதுகாப்புக்காக என்னால் முடிஞ்ச சிறிய உதவியா இதைச் செய்யறேன்.

ஆட்டோ
ஆட்டோ

ஆட்டோல ஏறும் எல்லாப் பயணிகளுக்கும் மாஸ்க் கொடுக்கிறேன். ஒரு நாளுக்கு 14 மணிநேரம் ஆட்டோ ஓட்டுறேன். ரூ.1,500 வருமானம் கிடைக்கும். டீசலுக்கு ரூ.200, மாஸ்க் ரூ.300 போக ஒரு நாளுக்கு எப்படியும் ரூ.1,000 கையில் நிக்கும். அந்த வருமானமே எனக்குப் போதும்.

என்னோட இந்தச் செயலால மக்கள் மகிழ்ச்சியடையுறாங்க. செல்ஃபி எடுக்குறாங்க. சமீபத்துல ஒரு பயணி ஆட்டோவுல ஏறினார். அந்தச் சவாரிக்கு 70 ரூபாய் ஆச்சு. அவர் கைல 100 ரூபாய்தான் இருந்துச்சு. மாஸ்க் வாங்க அது பத்தாது. அந்த நேரத்துல நான் மாஸ்க் கொடுத்தப்ப அவர் ரொம்ப சந்தோசமாகிட்டார். நானும் மாஸ்க் போட்டுதான் வண்டி ஓட்டுறேன்.

ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்
ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திர பிரசாத்

அடிக்கடி கை கழுவுறேன். அரசாங்கம் சொல்வதைப்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கை ரொம்ப முக்கியம். இந்த நேரத்துல மாஸ்கோட விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வரணும். முடிஞ்ச அளவுக்கு அரசே ரேஷன் கடைகள்ல மாஸ்க்குகளைக் கொடுக்கணும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு