Published:Updated:

`ஸூஹாவுக்கு ₹18 கோடி ஊசி கிடைத்துவிட்டது!' - கோவை டு டெல்லி; வென்றது பெற்றோரின் பாசப் போராட்டம்

பெற்றோருடன் ஸூஹா
பெற்றோருடன் ஸூஹா

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவை ஸூஹா பாப்பாவுக்கு உதவி கிடைத்துவிட்டது. இப்போது, ஸூஹாவின் பெற்றோருக்கு மத்திய அரசிடம் ஒரு கோரிக்கை இருக்கிறது.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா - ஆயிஷா தம்பதியின் 9 மாத பெண் குழந்தை, ஸூஹா ஜைனப் (Zuha Zainab). முதுகெலும்பு தசைநார் சிதைவு (Spinal Muscular Atrophy) என்ற அரிய, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஸூஹாவை தாக்கியுள்ளது. இந்த நோயை குணமாக்கும் மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஸூஹா
ஸூஹா
மும்பை டீராவைத் தொடர்ந்து கோவை ஸூஹா... அரிய வகை நோய்... கிடைக்க வேண்டும் தேசத்தின் உதவி!

மரபணு மாற்று தெரபிதான், இதற்கு பரிந்துரைக்கப்படும் வைத்தியம். அதற்காக, ஒருமுறை செலுத்தக்கூடிய, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய மருந்தான ஸோல்ஜென்ஸ்மா (Zolgensma)-ன் விலை, ரூ.18 கோடி.

இது அப்துல்லா - ஆயிஷா கனவிலும் யோசித்திருக்காத தொகை. அவர்களின் நிலை குறித்து, `டீராவை தொடர்ந்து ஸூஹா... அரிய வகை நோய்.. கிடைக்க வேண்டும் தேசத்தின் உதவி’ என்கிற தலைப்பில் கடந்த மார்ச் 9-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த நம் வாசகர்கள் ஸூஹாவுக்கு உதவ முன்வர, அவர்கள் மூலம் ஸூஹாவுக்கு ரூ. 1,96,700 நிதியுதவி கிடைத்தது. மேலும், பல ஊடகங்களும் ஸூஹா குறித்து செய்தி வெளியிட்டன.

உதவிய விகடன் வாசகர்கள் விவரம்
உதவிய விகடன் வாசகர்கள் விவரம்

ஆனாலும், சிகிச்சைக்குத் தேவையான தொகை கிடைக்கவில்லை. ஒரு தன்னார்வு அமைப்பினர், இந்த பாதிப்புக்கு இலவசமாக ஊசி வழங்கி வருகின்றனர். அங்கும் ஸூஹா பெயரை பதிவு செய்திருந்தனர்.

ஆரம்பத்தில் எங்கிருந்தும் மகிழ்ச்சியான தகவல் வரவில்லை. ஆனாலும், அப்துல்லா, ஆயிஷா தம்பதி மனம் தளரவில்லை. டெல்லி சென்றனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சர் அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் மனு கொடுத்தனர். கோவை தன்னார்வலர்கள் உதவியுடன் இரண்டு மாதங்கள் ஸூஹாவுடன் டெல்லியில் தங்கியிருந்து தொடர்ந்து பெரும் முயற்சி எடுத்து வந்தனர்.

டெல்லியில் அப்துல்லா ஆயிஷா
டெல்லியில் அப்துல்லா ஆயிஷா

அதற்கு தற்போது பலனும் கிடைத்துவிட்டது. அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்திருந்த தன்னார்வ அமைப்பினர் மூலம், ஸூஹாவுக்கு அந்த ஊசி கிடைத்துவிட்டது.

டெல்லியில் ஸூஹாவுக்கு வெற்றிகரமாக ஊசியும் போடப்பட்டுவிட்டது. இதற்கிடையில், மத்திய அரசாங்கமும் அவர்களுக்கு இந்த விஷயத்தில் உதவ முன் வந்துள்ளது. இதுகுறித்து ஸூஹாவின் பெற்றோர், ``அனைவரது ஆசிர்வாதங்களால் ஸூஹாவுக்கு ஊசி கிடைத்துவிட்டது.

மருத்துவமனையில் ஸூஹா
மருத்துவமனையில் ஸூஹா

அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ள தொகையை, ஸூஹா போல முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கலாம் என நினைக்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்” என்றனர்.

லாங் லிவ் ஸூஹா!

அடுத்த கட்டுரைக்கு