Published:Updated:

`10 நாள்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை!' -கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை

கோவை
கோவை

ஒரு கட்டத்தில், சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதித்திருந்த கோவை, தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் பாதிப்பு தினசரி மூன்று இலக்கத்தைக் கடக்கிறது. கடந்த வாரத்துக்கு முன்பு வரை சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்திருந்தது கோவைதான். கோவை மாவட்டத்தில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கொரோனா பாதித்தவர்களும் கோவையில்தான் சிகிச்சைபெற்றுவந்தனர்.

கோவை
கோவை

ஆனால், கடந்த சில வாரங்களாகவே கோவையில் பாதிக்கப்பட்டவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தது. இதனால் கோவை, சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டத்துக்கு மாறியது. தற்போது, சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் குணமடைந்ததால், கோவை, கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகியுள்ளது.

பச்சிளம் குழந்தையின் தாய்க்கு பாதிப்பு... 12 பேர் டிஸ்சார்ஜ்! -  கோவை கொரோனா அப்டேட்

கடந்த 3-ம் தேதி, வெங்கிட்டாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 31 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா பாதித்ததால், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 9-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. நேற்று, வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை
கோவை

இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்தது. இன்று காலை, கரும்புக்கடை பெண் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஆகியுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, `` கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகியுள்ளது. கடந்த 10 நாள்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நீலகிரியைச் சேர்ந்த 4 பேர் மட்டும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினரின் கூட்டு உழைப்பினால் இது சாத்தியமாகியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க, மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க, சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்” என்றார்.

மேற்கு மண்டலத்தில், ஈரோடு மற்றும் திருப்பூரைத் தொடர்ந்து கோவையும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு