கோவை தடாகம் பள்ளத்தாக்கில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சட்டப்படி அனுமதி வாங்காமல், தொடர்ந்து செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தன. இதனால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் செங்கல் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
இந்நிலையில், செம்மண் கொள்ளையால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மேக் மோகன், கணேஷ், சாந்தலா உள்ளிட்டோர் காளையனூர் அருகே ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வந்த செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்கள், ஆதரவாளர்கள் அவர்களை தாக்கினர்.

சமூக ஆர்வலர்கள் தாக்கியதாக செங்கல் தொழிற்சாலை ஆதரவாளர்கள் தரப்பிலும் புகார் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், போலீஸார் இரண்டு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சட்டவிரோத செங்கல் தொழிற்சாலைகளுக்கு எதிராக போராடி வரும் கணேஷ், ``தடாகம் பள்ளத்தாக்கு நீர்நிலைப் பற்றிய ஆய்வு புத்தகத்தை சாந்தலா என்ற மாணவி எழுதியுள்ளார். அது சம்மந்தமாக நீரியல் துறை, சுற்றுசூழல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படியும், செயற்கைகோள் பட உதவியுடனும் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் திரட்டியுள்ளார்.

தடாகம் பள்ளத்தாக்கைச் சுற்றி, கணுவாய் முதல் ஆனைக்கட்டி வரை உள்ள, சின்னவேடம்பட்டி ஏரி, சரவணம்பட்டி ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் காளையனூர் பகுதி நீரோடைகளில் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது வி.கே.வி செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் வந்து எங்களை சத்தம் போட்டார். செல்போனில் தொடர்பு கொண்டு, அங்குள்ள செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து எங்களை தாக்கினர்.

காவல்துறையினர் எங்களை பாதுகாக்க முயற்சி செய்தும் கூட, 60-க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கினார். எங்கள் வாகனத்தைத் தாக்கி பணம்,உடைமைகளை எடுத்துவிட்டனர்.
தடாகம் வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட சிறு ஓடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்வழித்தடத்தில் உண்மை நிலையை கண்டறிந்து, விவசாயிகளுக்கு பாசனத்துக்கு வழிவகுக்கும் நீர் நிலைகளில் கனிம வளம் சுரண்டப்பட்டுள்ள அவல நிலையை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லதான் இந்த முயற்சியை செய்து வருகிறோம்.

கனிமவளக் கொள்ளையர்களின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்தப் பகுதியை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆய்வு புத்தகம் எழுதி வரும் சாந்தலா ரமேஷ், `` `Stuck in the Days of Abundance – The Strange Case of Streams at Thadagam Valley’ என்ற தலைப்பில் தடாகம் பள்ளத்தாக்கு ஓடைகளுக்கான தண்ணீர் வரத்து குறித்த ஆய்வு புத்தகத்தை எழுதியுள்ளேன். 2021 அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை பெய்தபோது, பள்ளத்தாக்கில் உள்ள சிற்றோடைகள் நிரம்பியும் கணுவாய் தடுப்பணைக்கு நீர் வரவில்லை.

இந்தப் புத்தகத்தை தமிழ்நாடு சுற்றுசூழல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, காவிரி நதி நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன், சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மைய முன்னாள் தலைவர் பேராசிரியர் அஜீஸ் ஆகியோரின் பார்வைக்கு கொண்டு சென்றபோது வெகுவாகப் பாராட்டினர்.
செயற்கை கோள் படத்தில் அடிப்படையில், ஓடைகளின் நிலையை ஆய்வு செய்ய சென்றோம். ஒரு பொம்மை ட்ரோன் கேமராவை பறக்க விட்டிருந்தோம். ட்ரோனை செங்கல் கால்வாயை பார்க்க விடவில்லை. அருகில் இருந்து ஒரு குறுகலான பகுதியை பார்க்கத்தான் பறக்க விட்டோம். பலத்த காற்று அடித்ததில் செல்போனுக்கும், ட்ரோனுக்கும் இருந்த சிக்னல் முறிந்துவிட்டது.
ட்ரோனை நாங்கள் தேடிக் கொண்டிருக்கும்போது, எங்களை திட்டி அடித்து, வாகனங்களையும் உடைத்தனர். நாங்கள் மொத்தமே நான்கு பேர்தான் இருந்தோம். அவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் வந்தனர். சிறுவன் உள்பட எல்லோரையும் அடித்தனர்.
அவர்களே எல்லாம் செய்துவிட்டு, கடைசியில் நாங்கள் தாக்கியதாக போலியான புகார் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களின் வாட்ச்மேனிடம் நாங்கள் வாக்குவாதம் செய்ததாக கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் செங்கல் தொழிற்சாலைக்கும், நாங்கள் இருந்தப் பகுதிக்கும் 2 கி.மீ தொலைவு இருந்தது.
பிறகு எப்படி நாங்கள் வாக்குவாதம் செய்ய முடியும். எல்லாமே காவல்துறையின் முன்னணியில் தான் நடந்தது நாங்கள் பொய் செய்ய செல்ல வேண்டிய அவசியம் கிடையாது,” என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ள வி.கே.வி செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் சுந்தர்ராஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளரான சி.ஆர். ராமசந்திரனை தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்தும் பதில் வரவில்லை.