Published:Updated:

கோவை: கொட்டித் தீர்த்த கனமழை... இடிந்து விழுந்த கட்டடம்! - இருவர் பலியான சோகம்

கோவை விபத்து நடந்த கட்டடம்
கோவை விபத்து நடந்த கட்டடம்

கோவை செட்டிவீதியில் கனமழை காரணமாக இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை செட்டிவீதிப் பகுதியில் வனஜா என்பவருக்குச் சொந்தமாக ஓர் இரண்டு மாடி கட்டடம் உள்ளது. கடந்த சில நாள்களாக கோவையில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நேற்று மாலை முதலே கோவை முழுவதும் பரவலாக மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

கோவை விபத்து கட்டடம்
கோவை விபத்து கட்டடம்
மழை வந்தால் அரசும், மக்களும் செய்ய வேண்டியது இதுதான்! ரமணன் Exclusive Interview | SR Ramanan

குழந்தைகள், முதியவர்கள் எனச் சுமார் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பதறியடித்து பொதுமக்கள் மீட்புப்பணியைத் தொடர்ந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோரும் நேரில் வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். கட்டடம் இடிந்து விழுந்ததில், கீழே இருந்த ஓர் ஓட்டு வீடும் இடிந்துவிட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்தக் கட்டடம் மிகவும் பழைமையானது எனத் தெரியவந்திருக்கிறது. விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான சாலை.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அதனால், மீட்புப் பணியில் சற்றுச் சிக்கல் நீடித்தது. அப்படியிருந்தும் இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்தது. தன்வீர், வனஜா, மனோஜ், மணிகண்டன், கவிதா, சரோஜினி ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கோபால்சாமி என்ற 72 வயது முதியவர் மற்றும் ஸ்வேதா என்ற பெண் ஆகிய இருவர் உயிரிழந்துவிட்டனர். கஸ்தூரி என்ற 65 வயது பெண் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரவு முழுவதும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால், கஸ்தூரி உயிர் பிழைப்பது சந்தேகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விபத்துச் சம்பவம் கோவை மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு