Published:Updated:

மாற்றுத்திறனாளி மகனுடன் வீடு கேட்டு மனு கொடுத்த பெண்; கோவை ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடுக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்
News
வீடுக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்

வீடு கேட்டு மாற்றுத்திறனாளி மகனுடன் மனு கொடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, வீட்டுக்கான ஆணை வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் கோவை ஆட்சியர் சமீரன்.

மாற்றுத்திறனாளி மகனுடன் வீடு கேட்டு மனு கொடுத்த பெண்; கோவை ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடு கேட்டு மாற்றுத்திறனாளி மகனுடன் மனு கொடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, வீட்டுக்கான ஆணை வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் கோவை ஆட்சியர் சமீரன்.

Published:Updated:
வீடுக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்
News
வீடுக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்

கோவை, செட்டிபாளையம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் ஷீலாவுக்கு வயது 44. கணவர் கோபால் இறந்து 13 ஆண்டுகளாகி விட்டன. 14 வயது மகன் ராமசாமி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட மணியம்மாள் என்கிற 63 வயது மூதாட்டி, தன் வீட்டில் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் ஷீலா
ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் ஷீலா

கடந்த நவம்பர் மாதம், வீடு கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார் ஷீலா. அப்போது, தன்னைவிட உருவத்தில் பெரிதாக இருக்கும் தன் மகன் ராமசாமியை அவர் தூக்கிச் சென்றது, அங்கிருந்தவர்களின் மனதை கனக்கச் செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், சர்ப்ரைஸாக ஷீலாவின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டுக்கான ஆணையை வழங்கியுள்ளார். அருகில் இருப்பவர்கள்கூட பெரிதாகக் கண்டு கொள்ளாத தங்கள் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததைத் துளியும் எதிர்பாராத ஷீலா இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

பிறகு, ஆட்சியர் சமீரன் விவரங்களைச் சொன்னவுடன் அவரின் முகம் முழுவதும் மகிழ்ச்சியிலும், ஆனந்த கண்ணீரிலும் நிரம்பியது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஆட்சியர்
சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஆட்சியர்

நம்மிடம் பேசிய ஷீலா, ``எனக்கு சொந்த ஊர் இதுதான். கல்யாணத்துக்கு முன்னாடி வரை கட்டட வேலைக்குத்தான் போயிட்டு இருந்தேன். அப்பதான் கோபால் பழக்கமாகி கல்யாணம் கட்டிக்கிட்டோம். அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிருக்கு. ஆனா, அதை என்கிட்ட மறைச்சுருக்கார். கல்யாணம் கட்டினப்பறம்தான் அது தெரிஞ்சது. பையன் பொறந்து 6 மாசம் நல்லாத்தான் இருந்தான்.

ஒருதடவை பெரியாஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனப்பதான், `உங்க பையனுக்கு மனவளர்ச்சி கம்மி’னு சொன்னாங்க. என் வீட்டுக்காரர் குடிச்சிட்டு சண்டை போட்டுட்டே இருப்பார். நான்தான் கட்டட வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்த்துட்டு இருந்தேன். பையனுக்கும் இப்படி இருக்கறதால அந்த மனுசன் எங்களை விட்டு ஓடிட்டார். கொஞ்ச நாள்லயே அவர் இறந்துட்டதாவும் சொன்னாங்க.

அப்ப மணியம்மா, எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருந்தாங்க. எங்க சூழ்நிலைய பார்த்துட்டு அவங்க வீட்லயே தங்க வெச்சாங்க. அவங்க வீட்ல என் பையன பார்த்துட்டு இருப்பாங்க. நான் கட்டட வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.

மனு கொடுத்தபோது
மனு கொடுத்தபோது

பையன் பெருசானதும் அவங்களால சமாளிக்க முடியல. அதனால நான் வேலைய விட்டேன். அவங்கதான் ஹோட்டல்ல பாத்திரம் கழுவறது, அது இதுன்னு கிடைக்கற வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு வயசாகிடுச்சு.

இப்ப அவங்களால வேலைக்குப் போக முடியறதில்ல. என்னாலயும் பையனை விட்டு நகர முடியாது. இவனை ஒரு ஆள் கண்காணிச்சுட்டே இருக்கணும். இல்லாட்டி எதையாச்சும் கீழ போட்டு உடைச்சுடுவான். மண்ணை நக்குவான். ஒருதடவை சரியா கவனிக்காம அவன் கீழ விழுந்து ரொம்ப அடிபட்ருச்சு. இவனை கட்டிப் போட்டுதான் வேலையே பார்ப்பேன்.

ஆரம்பத்துல கொஞ்சம் நடந்துட்டுதான் இருந்தான். அப்பறம் நடக்கறதையே மறந்துட்டான். இப்ப அவன் நடக்கறது இல்ல. சாப்பிடறதுல இருந்து எல்லாமே நம்மதான் செஞ்சு விடணும். தூங்கறப்பக் கூட நான் பக்கத்துல இருக்கணும். அவனுக்கும், எனக்கும் சேர்த்து அரசுகிட்ட இருந்து ரூ.3,000 உதவித்தொகை வருது. அதுலதான் குடும்பம் ஓடுது. ஒவ்வொரு தடவை இங்க இருந்து பெரியாஸ்பத்திரிக்கு செக்கப் போனா கூட ஆட்டோக்கே ரூ.1,000-க்கு மேல எடுத்து வைக்கணும்.

ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்
ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்

மருந்து, அது இதுனு போனா இன்னும் செலவாகும். ஏதோ நரம்பு டாக்டரை பார்த்து பெல்ட் எல்லாம் போட்டா, தம்பி நடப்பான்னு சொல்றாங்க. அது எப்படி பண்றதுனு தெரியல. எத்தனை நாளுக்கு இவங்கள சிரமப்படுத்தறதுனுதான் வீடு கேட்டு மனு கொடுத்தோம். கலெக்டர் சாரே வீட்டுக்கு வந்து ஆணை கொடுப்பார்னு நினைச்சுக்கூட பார்க்கல.

ரொம்ப சந்தோஷம். எனக்குப் பெருசா எந்த ஆசையும் இல்ல. என் பையன் நல்லாருக்கணும். அவன் நடந்தாலே பாதி பிரச்னை முடிஞ்சது. முன்னாடிக்கு இப்ப அவன்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு. டிவி எல்லாம் பார்த்து அவனா கைத்தட்றான். 4, 5 வார்த்தை பேசறான். இங்க இருந்து டவுனு ஆஸ்பத்ரிக்குப் போய்ட்டு வர்றதுதான் ரொம்ப சிரமமா இருக்கு. அரசு எங்களுக்கு வீடு கொடுத்துருக்கற மலுமிச்சம்பட்டி இன்னும் தூரம். சார் கொடுத்தப்ப எனக்கு சந்தோஷத்துல பேச்சே வரல.

மகனுடன் ஷீலா
மகனுடன் ஷீலா

கொஞ்சம் டவுன் பக்கம் கிடைச்சா, பையன ஆஸ்பத்திரி கூப்பிட்டு போய்ட்டு வர சௌகரியமா இருக்கும். நான் வாழ்றதே பையனுக்காகத்தான். எனக்கு எந்த ஆசையும் இல்ல. என் பையன் நடக்கணும். அதை நான் பார்க்கணும். அதுக்கு வாய்ப்பிருக்கற பெரியவங்க உதவி பண்ணா நல்லாருக்கும்” என்றார் கண்ணீருடன்.

ராமு நடந்துவிட மாட்டானா என்ற ஏக்கத்தில் 14 வயதிலும் மகனை கருவில் இருப்பதைப் போல பாதுகாப்பாக சுமந்து கொண்டிருக்கிறார் ஷீலா. ஆட்சியர் அவர் வீட்டுக்கு சென்றபோது, ``வீடு சரியாகறப்ப... இதுவும் சரியாகிடும் (மகன் ராமசாமியைப் பார்த்து)” என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார் சமீரன்.

தேடி வந்து தீர்வு கொடுக்கும் ஆட்சியாளரின் செயலும், மணியம்மாளின் நேயமும் ஷீலாவின் இருள் நிறைந்த வாழ்வில் நம்பிக்கை ஒளியாகச் சுடர்விடுகின்றன.