கோவை – அன்னூர் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓர் சாலை விபத்து நடந்தது. அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சரத்குமார், நஜீம், பாசில், தினேஷ், ஹக்கீம், சுதர்சன், திலீப், பீமா இவர்கள் எட்டுப் பேர் தங்களுடைய நான்கு இரு சக்கர வாகனங்களில் ஊட்டி சென்றுள்ளனர்.
ஊட்டியிலிருந்து அன்னூர் வழியாகக் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். கடத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, தினேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, நஜீம் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகத்தில் வந்த லாரி திடீரென்று இவர்களின் வாகனம் மீது மோதியது. இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
படுகாயமடைந்திருந்த தினேஷ் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். சேலம் நரஜோதிபட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஸ்வரன் தம்பதிக்கு தினேஷ் ஒரே மகன் ஆவார். இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகள் பெற்றோர் விருப்பத்துடன் தானம் செய்யப்பட்டன.

மறைந்தாலும் அவன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகப் பெற்றோர் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அன்னூர் போலீஸ், சம்பந்தப்பட்ட லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.