`1997-ல் கொல்லப்பட்ட கோவை காவலர் செல்வராஜ்!’ - 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மகளுக்கு அரசுப் பணி
கோவையில், 1997-ம் ஆண்டு கொல்லப்பட்ட காவலரின் மகளுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.

1997-ம் ஆண்டு கோவை வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டின் நவம்பர் மாதம் 29-ம் தேதி, உக்கடம் அருகே பணியில் இருந்த செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்படுகிறார். இதையடுத்து ஏற்பட்ட வன்முறை, மதக்கலவரமாக மாறியது. கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன.

கோவை கலவர பூமியானது. இதைத்தொடர்ந்து, 1998-ம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில், 58 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டபோது, அவருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. கலவரத்தில் அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை யோசிக்கக்கூட பலருக்கும் நேரமில்லை.

இந்நிலையில், செல்வராஜின் மகள் லாவண்யாவுக்கு, தற்போது அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
21 வயதாகும் லாவண்யாவுக்கு அரசுப் பணியைப் பெற்றுக் கொடுக்க காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். தற்போது கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பிறப்பித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை பணியில் சேர்ந்துவிட்டார் லாவண்யா. இதையடுத்து, தன் தாயுடன் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.