Published:Updated:

தமிழகத்திலேயே அதிக குணமடைந்தவர்கள்... கவனம் ஈர்க்கும் கோவை

கோவை
கோவை

தமிழகத்திலேயே கோவையில்தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அதிகளவில் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் 1,821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 495 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 141 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை
கோவை

நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களும் கோவையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், உணவு கொடுத்த தன்னார்வலர் என்று பல்வேறு தரப்பினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அச்சத்தில் மூழ்கியது. ஆனால், தற்போது மாநிலத்திலேயே கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடையும் மாவட்டம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது கோவை.

கோவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 6 போலீஸாருக்கு கொரோனா உறுதி செய்யப்படத்தைத் தொடர்ந்து, குனியமுத்தூர் மற்றும் போத்தனூர் காவல்நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில வாரங்களாகக் கோவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கோவை
கோவை

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 185 பேரும், பி.எஸ்.ஜி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் என மொத்தம் 190 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மளிகைப் பொருள்களை இராசாமணி வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் இராசாமணி, ``கோவை மாவட்டத்தில் 141 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 25 பேர் வரும் வாரத்தில் குணமடைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 16 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்சியர் இராசாமணி, டீன் நிர்மலா
ஆட்சியர் இராசாமணி, டீன் நிர்மலா

சமூக பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அநாவசியமாக வெளியல் வருபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா, ``கோவையில் 116 பேர், திருப்பூரில் 59, நீலகிரியில் 8 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். வீட்டிலும் அவர்களைத் தனிமையாக இருக்கச் சொல்லியுள்ளோம். இ.எஸ்.ஐ மருத்துமவனையில் சுழற்சி முறையில் பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறோம்.

ஆட்சியர் இராசாமணி, டீன் நிர்மலா
ஆட்சியர் இராசாமணி, டீன் நிர்மலா

அவர்கள் தங்குவதற்காக இரண்டு ஹோட்டல்களில் ஏற்பாடு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வழங்கினோம். சுமார் 10 குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பது சற்று கடினம். சில இடத்தில் தாய்க்கு நெகட்டிவ் என்றும், குழந்தைக்கு பாசிட்டிவ் என்றும் வந்தது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய் உடன் இருந்தாக வேண்டும். அவர்கள் அனைவரும் நாங்கள் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றினர்.

கோவை
கோவை

குணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு