Published:Updated:

`மனிதக் கழிவுகளை அகற்ற 3 ரோபோக்கள்!’ - கோவை மாநகராட்சியின் புதிய அறிவிப்பு

எம்.புண்ணியமூர்த்தி
தி.விஜய்

ஒரு ரோபோவின் விலை ரூ.17 லட்சம். ஒரு ரோபோவை மாநகராட்சியின் செலவில் வாங்க உள்ளோம் மற்ற இரண்டு ரோபோக்களை எச்.பி.சி.எல் நிறுவனமும் வாங்கித்தர உள்ளது.

 கோவை மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகராட்சி ஆணையர்

``மலக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோவை மாநகராட்சிக்கு மூன்று ரோபோக்கள் வாங்கப்பட உள்ளன; இனி மழை நீரைச் சேகரிக்காத கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார் கோவை மாநகராட்சி கமிஷனர்”

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி
தி.விஜய்

கோவை மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "திடக்கழிவு மேலாண்மை என்பது கோவை மாநகராட்சிக்குப் பெரும் சாவாலான விஷயமாக இருக்கிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை எனக் குப்பைகளை மக்களே பிரித்துக்கொடுக்க வேண்டும். ஆனால், பொது மக்கள் அதைச் செய்வதில்லை. குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் குப்பை வரி வசூலிக்கப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கைப்போல கோவை மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாது மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுப்பதற்கு கோவை மாநகாட்சி சார்பாக மூன்று ரோபோக்கள் வாங்கப்பட உள்ளன. ஒரு ரோபோவின் விலை ரூ.17 லட்சம். ஒரு ரோபோவை மாநகராட்சியின் செலவில் வாங்க உள்ளோம் மற்ற இரண்டு ரோபோக்களை எச்.பி.சி.எல் நிறுவனமும் வாங்கித்தர உள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி மீண்டும் ஏற்படாத வகையில் மழைநீரைச் சேமிக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த ஒவ்வொரு வார்டுக்கும் 3 தனி நபர் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனி மழைநீர் சேமிக்காத அனைத்து வகையான கட்டடங்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 8 குளங்கள் மற்றும் குறிச்சிக் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. குளங்களில் கழிவுநீரை கலக்காத வகையில் 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதாளச் சாக்கடை திட்டத்துடன் இணைக்கவும், வீடுகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை இணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களுக்கு வரும் கழிவுநீரை இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செங்குளம் குளத்திற்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வதந்தி. அதேபோல, பெரிய குளத்தின் கரையின் உயரம் குறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தவறு" என்றார்

இறுதியாக வறட்சிக்காலத்தில் 24 மணிநேரமும் சூயஸ் எப்படி குடிநீர் விநியோகம் செய்யும் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சூயஸ் குறித்து ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது. 24 மணி நேர தண்ணீர் விநியோகம் செய்ய முடிவதற்கான உட்கட்டமைப்பு வசதி மாநகராட்சியிடம் இருக்கிறது. அதனால் வரி உயர்வு இருக்கப்போவதில்லை. நீரின் அளவை கணக்கு செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து. அதைக் கண்காணிக்கவே சூயஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றவரிடம், அடுத்தடுத்து சூயஸ் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சிரமப்பட்ட மாநகராட்சி கமிஷனர், ``இது முந்தைய அதிகாரிகள் போட்ட திட்டம். அவர்களை கலந்தாலோசித்துதான் முடிவெடுத்திருப்பார்கள். இருப்பினும் சூயஸ் குறித்து விரிவாக விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும்” என்று முடித்தார்.