Election bannerElection banner
Published:Updated:

கோவை: நகையை அடகுவைத்து கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறிகள்! -நெகிழவைத்த தம்பதியின் மனிதநேயம்

மின்விசிறி
மின்விசிறி

`கொரோனாவிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறோம்’ என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகளிடம் பதில் இல்லை. ஆனால், இந்தச் சூழ்நிலையை முறியடிப்போம் என்ற நம்பிக்கை விதையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய தம்பதியர் விதைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இன்னும் உக்கிரமாக மக்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் நாடே தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதுபோல அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நிரம்பி வழியும் மருத்துவமனைகள், பிணக்குவியல்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் ரணத்தைக் கொடுக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
கோவை: மருத்துவமனைப் பயன்பாட்டுக்குத் தயாராகும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!  #PhotoAlbum

முதல் அலையைவிட பாதிப்பு அதிகம் இருப்பதால் ஊரடங்கு, பொருளாதாரம் என்று பல விஷயங்கள் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகளிடம் பதில் இல்லை.

ஆனால், இந்தச் சூழ்நிலையை முறியடிப்போம் என்ற நம்பிக்கை விதையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய தம்பதியர் விதைத்திருக்கிறார்கள். அந்த விதையின் பெயர் மனிதநேயம். மருத்துவமனைகளில் பலர் இடம் கிடைக்காமலும், போதிய வசதிகள் இல்லாமலும் தவித்துவருகின்றனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

கோவையைப் பொறுத்தவரை, இங்கு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகங்கள் கொரோனா வைரஸுக்குப் பிரதான சிகிச்சை மையங்களாக உள்ளன. அதிலும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, குளிரூட்டப்பட்ட மருத்துவமனை என்பதால், இங்கு மின்விசிறி வசதி இல்லை.

``கொரோனா காலத்தில் குளிர்சாதன வசதியையும் பயன்படுத்த முடியாது. குளிர்சாதன வசதியும் இல்லாமல், மின்விசிறியும் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுவதால் அரசாங்கம் சார்பில் 300 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மேலும், மின்விசிறிகள் தேவைப்படும் என்பதால், விருப்பப்பட்டவர்கள் மின்விசிறி வழங்க முன்வரலாம்.

மின்விசிறி சம்பவம்
மின்விசிறி சம்பவம்

கொரோனா வைரஸ் காலகட்டம் முடிந்தவுடன் அவர்கள் மின்விசிறியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள்தான் இந்த கொரோனா காலத்தில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை.

ஒரு தம்பதியர் மருத்துவமனை முதல்வரைச் சந்தித்திருக்கிறார்கள். அந்த சந்திப்பில் அவர்கள் கூறிய முதல் விஷயம், ``எங்கள் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட வேண்டாம். நாங்கள் காலையில் முதல்வரின் அறிவிப்பைக் கேட்டோம். இ.எஸ்.ஐ-க்கு 100 மின்விசிறிகளை வழங்கவந்திருக்கிறோம். முதல்வர் அறிவிப்பைக் கேட்டபோது எங்கள் கையில் பணம் இல்லை.

மின்விசிறி
மின்விசிறி

எனவே, எங்களது நகைகளை அடகுவைத்தோம். அதில் ரூ.2,20,000 பணம் கிடைத்தது. அதைவைத்து 100 மின்விசிறிகளை வாங்கி வந்திருக்கிறோம். எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த உதவியை ஏற்பதில் முதல்வருக்குத் தயக்கம் இருந்தது.

``நீங்களே கஷ்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சக்திக்குத் தகுந்ததுபோல நான்கைந்து மின்விசிறிகள் மட்டும் வாங்கிக் கொடுங்கள். அதுவே போதும்” என்று கூறினார். அதை அந்தத் தம்பதியர் ஏற்க மறுத்துவிட்டனர். ``நாங்கள் 100 மின்விசிறிகளைக் கொடுத்துவிட்டுத்தான் போவோம்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

முதல்வர் இந்த விஷயத்தை கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதையடுத்து, ஆட்சியரும் அந்தத் தம்பதியரிடம் பேசியிருக்கிறார். கடைசிவரை அந்தத் தம்பதியர் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.

``சரி... அவர்கள் மனது வருத்தப்பட வேண்டாம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்குவோம். மின்விசிறிகளை பெற்றுக்கொண்டு, அதைத் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குங்கள்” என்று ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். அந்தத் தம்பதியருக்கு மருத்துவமனை முதல்வர், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். ஊடகங்களும், மருத்துவமனை நிர்வாகமும் அவர்களை கௌரவிப்பதற்காகப் பலமுறை கேட்டும், தங்களது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டனர் அந்த பெரிய மனது படைத்த தம்பதியர்.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

முகமும் காட்டாமல், முகவரியும் தெரியாமல் பல பேருக்கு உதவி செய்து மறைந்த சாந்தி சமூகசேவை அறக்கட்டளை சுப்பிரமணியம் வாழ்ந்த பூமி இந்த கோவை. இங்கு அவரைப்போல இன்னும் பலர் இருக்கின்றனர் என்பதற்கு இந்த தம்பதியர்தான் உதாரணம். தனிமனித இடைவெளி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் இவற்றுடன் இந்த மனிதநேயம் என்னும் மகத்தான நம்பிக்கையுடன் கொரோனா வைரஸை வீழ்த்துவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு