Published:Updated:

முடங்கிய ஆதரவற்ற மக்கள் - களத்தில் இறங்கி உணவு, நீர், தங்குமிடம் ஏற்பாடு செய்த கோவை ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி

வட இந்தியர்கள் மற்றும் ஆதவற்ற மக்களுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் உணவு, தண்ணீர், தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஊரடங்கு உத்தரவால் கோவை வெறிச்சோடி காணப்படுகிறது. பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருக்க, மிகவும் குறைந்த அளவிலான வாகனங்களே இயக்கப்பட்டன. இந்நிலையில், ரயில்நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் உணவு, தண்ணீர், தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

காந்திபுரம் மேம்பாலம்
காந்திபுரம் மேம்பாலம்

இதுகுறித்து செய்தியாளர்கள் சிலர் அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வாகனத்தை நிறுத்தி, செய்தியாளர்கள் மூலம் தகவலைக் கேட்டறிந்தார்.

பிறகு, அவர்களுக்குத் தனது அலுவலகத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மேலும், கோவை உணவு வங்கி, மக்கள் பாதை உள்ளிட்ட சில நல் உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

உணவு வழங்கும் ஆட்சியர்
உணவு வழங்கும் ஆட்சியர்

ஆனால், நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே அதிகாரிகளிடம் பேசி, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபம் மற்றும் சி.எஸ்.ஐ மண்டபங்களில் அந்த மக்கள் இன்று இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டார்.சிறிது நேரத்தில் வாகனங்களின் மூலம் அந்த மக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்தனர்.

வடகோவை மேம்பாலம்
வடகோவை மேம்பாலம்

கிட்டத்தட்ட 2 மணி நேரம் மாவட்ட சாலையோரத்திலேயே நின்று இந்தப் பணிகளை மேற்கொண்டார். இதனால், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு