Published:Updated:

குணமடைந்தவர்கள் அதிகரிப்பு.. பாதிக்கப்பட்டோர் குறைவு.. நம்பிக்கையளிக்கும் கோவை

கோவை
கோவை

கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1,596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 358 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 134 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவையில் ஒரு பெண் காவலருக்கும் கொரோனா பாசிட்டிவாகியுள்ளது.

கோவை
கோவை

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தொடக்கத்திலிருந்தே கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், மருத்துவர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், கடந்த சில நாள்களாக கோவையில் பாதிக்கப்பட்டோரைவிட, குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவையில் கடந்த ஐந்து நாள்களில் புதிததாக 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. அதேநேரத்தில், ஏற்கெனவே 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்று மேலும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 29 பேர் கோவை, 3 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். நேற்று 18 பெண்கள், 11 ஆண்கள், 3 குழந்தைகள் வீடு திரும்பியுள்ளனர்.

கோவை
கோவை

தற்போதுவரை கோவையில் 86 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். முக்கியமாக, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 50 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவது கோவை மக்களிடம் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ``கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடனே, இ.எஸ்.ஐ மருத்துவமனையை அதற்காக சிகிச்சையளிக்கும் வகையில் மாற்றிவிட்டோம். கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க, மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று மிகப்பெரிய குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதன் பலனாகத்தான் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாகக் குணமடைந்து வருகின்றனர்.

கோவை
கோவை

தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்த ஒரு வாரத்தில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பொது மக்கள் அரசின் நடவடிக்கைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். ஊரடங்கு மேலும் சில நாள்களுக்கு இருப்பதால், மக்கள் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும். அதன் மூலம் கோவையில் 100 சதவிகிதம் வைரஸ் தொற்று இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு