Published:Updated:

`மனைவி போயி இன்னையோட ஓராண்டு... ஆனா எதுவும் மாறல...!' - குமுறும் கோவை மருத்துவர் ரமேஷ்

மனைவி படத்துடன் மருத்துவர் ரமேஷ் ஷோபனா
News
மனைவி படத்துடன் மருத்துவர் ரமேஷ் ஷோபனா

இயற்கை, பழங்குடி மக்கள், உயிரினும் மேலான மனைவி, மகள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த மருத்துவர் ரமேஷின் வாழ்வில் பேரிடியாய்த் தாக்கியது அந்த விபத்து. நொறுங்கிப் போன இதயத்துடன், தனது மனைவியின் உயிருக்கு நீதி கேட்டு, அவரது சடலத்துடனேயே அமர்ந்து போராடினார்.

உலகமே கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ்க்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு, குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓர் இளைஞரால் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை வைத்துக்கொண்டு 4 மணி நேரம் போராடினார் கோவை மருத்துவர் ரமேஷ்.

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், எளிய மக்களின் பேரன்பு மருத்துவர். அவரது மனைவி ஷோபனா. மகள் சாந்தலா, ஆனைக்கட்டியில் உள்ள ஓர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

மனைவி சடலத்துடன் மருத்துவர் ரமேஷ்
மனைவி சடலத்துடன் மருத்துவர் ரமேஷ்

2019 ஜூன் 24-ம் தேதி, சாந்தலாவைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக ஷோபனா தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். சாந்தலாவை அழைத்துக் கொண்டு ஜம்புகண்டி அருகே வரும்போது, எதிரில் அசுரவேகத்தில் வந்த ஓர் இருசக்கர வாகனம் மோதியதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகள் சாந்தலா பலத்த காயமடைந்தார். இளைஞர் பாலாஜி குடிபோதையில் வண்டி ஓட்டியதே அந்த கோர விபத்துக்குக் காரணம். இயற்கை, பழங்குடி மக்கள், உயிரினும் மேலான மனைவி, மகள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த மருத்துவர் ரமேஷின் வாழ்வில் பேரிடியாய்த் தாக்கியது அந்த விபத்து. நொறுங்கிப் போன இதயத்துடன், தனது மனைவியின் உயிருக்கு நீதி கேட்டு, அவரது சடலத்துடன் விபத்து நடந்த இடத்திலேயே அமர்ந்து போராடினார் ரமேஷ்.

மனைவி சடலத்துடன் மருத்துவர் ரமேஷ்
மனைவி சடலத்துடன் மருத்துவர் ரமேஷ்

அதிகாரிகள் விரைந்தனர். ஜம்புகண்டிப் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அந்த டாஸ்மாக்கை மூடியதைத் தவிர அரசாங்கம் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனத்த இதயத்துடன் ரமேஷிடம் பேசினோம்.

"ஷோபனா செவிலியரா இருந்தாங்க. என்னிடம் பணி செய்துகொண்டிருந்தார். 1997-ம் ஆண்டிலிருந்து என்னுடன் பணியாற்றி வந்தார். 2003-ம் ஆண்டு, 'திருமணம் செய்து கொள்ளலாமா?' என அவரிடம் கேட்டேன். 'சரி' என்று சொன்னார். என் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, மாலை மாற்றிக்கொண்டோம். நாங்கள் திருமணம் செய்துவிட்டதாக வெளி உலகுக்கு அறிவித்தோம். அவ்வளவுதான் எங்கள் திருமண நிகழ்வு. திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் போகாத இடமே இல்லை. என் மகள் இயற்கை ஆர்வலர். பூ முதல் பூச்சி வரை இயற்கையின் அனைத்து விஷயங்களையும் போட்டோ எடுப்பார். நொய்யலின் பாதை முழுவதும் பயணித்திருக்கிறோம்.

மருத்துவர் ரமேஷ்
மருத்துவர் ரமேஷ்

கேரளாவில் ஒரு வனப்பகுதியில்தான் ஷோபனாவின் வீடு இருக்கிறது. அதனால், அவருக்குச் செடிகள், கொடிகளின் தன்மை குறித்து நன்கு தெரியும். களத்தில், செடிகள் குறித்து அவர்தான் எங்களுக்கு எடுத்துச் சொல்லுவார். மிகவும் சிறப்பான ஒரு பெண் அவர். அந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைவிட இந்தக் கலாசாரத்தை நினைக்கும்போதுதான் இன்னும் வேதனையாக இருக்கிறது" என்று நிதானிக்கிறார் ரமேஷ்.

என்னைப் பொறுத்தவரை சிகிச்சைக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்வேன். எளிய மக்களிடம் பணம் இல்லை என்றாலும் பேரன்புடன் சிகிச்சையளிப்பேன். 1998-ம் ஆண்டு ஒரு மாலை நேரம் என்னுடைய க்ளினிக்கில் பயங்கரக் கூட்டம். அன்றைய தினம் மனதுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. ஏதோ தவறாக நடப்பது போலத் தோன்றியது. வெளியே சென்று பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் படுத்திருக்கிறார். அருகில் ஒரு பழங்குடிப் பெண் அமர்ந்திருந்தார். 'சார், நாங்க தூமனூர்ல இருந்து வரோம். இவர பாம்பு கடிச்சுருச்சு' என்றார்.

மருத்துவர் ரமேஷ்
மருத்துவர் ரமேஷ்

பதறிப்போய் அவரைப் பார்த்தால், ஒரு நாய் காலைக் கடித்துக் குதறியது போல இருந்தது. ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை. போதிய போக்குவரத்து வசதியும் இல்லை. என்னுடைய ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்டு, அடித்துப் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி வந்துவிட்டேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நபர் என் க்ளினிக்குக்கு வந்து, 'சார் என்னைத் தெரிகிறதா?' என்று கேட்டார். 'தெரியவில்லையே' என்று நான் பதிலளித்தேன். 'நான்தான் அந்தப் பாம்புக்கடி வாங்கினவன்' என்று சொல்லி, எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஒரு பாட்டில் மலைத்தேனைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தத் தேனின் சுவையை ரசித்தவன்நான்.

மருத்துவர் ரமேஷ்
மருத்துவர் ரமேஷ்

அந்தக் கலாசாரத்தை அனுபவித்த எனக்கு, இப்படிப்பட்ட குடிபோதை கலாசாரத்தை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. பழைய கலாசாரம் மறைந்து, குடிபோதை கலாசாரம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டு கலாசாரத்தையும் அனுபவித்தவன் என்பதால், எது வேண்டுமென என்னால் கேட்க முடியும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விபத்தை ஏற்படுத்திய இளைஞர் மீது எனக்கு துளிக்கூட கோபமோ, வருத்தமோ இல்லை. டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து விற்பது அரசாங்கம் தானே? இந்த அரசாங்கம்தான் மக்களுக்கு தாய், தந்தை எல்லாம். வருமானம் வேண்டுமென்பதற்காக கண்ணை விற்று சித்திரம் வரைவது நியாயமில்லை. அந்த விபத்துக்குப் பிறகு ஜம்புகண்டி டாஸ்மாக் கடையை மூடினர். ஆனால், அருகே உள்ள மாங்கரையில் டாஸ்மாக் கடை திறந்துவிட்டனர். இந்தக் கொரோனா காலகட்டத்தில் கூட இளைஞர்கள் குடித்துவிட்டு நிலைதடுமாறி செல்வதை என்னால் பார்க்க முடிகிறது.

மருத்துவர் ரமேஷ்
மருத்துவர் ரமேஷ்

அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. இங்கு மாற வேண்டியது இந்தக் கலாசாரம்தான். இந்தக் கலாசாரம் அந்த தேனைப் போல இருக்க வேண்டுமென நினைக்கிறேன். என் மனைவியின் நினைவு நாளில், அவரது நினைவிடம் மற்றும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று, இந்தக் கலாசாரம் மாற வேண்டுமென அவரிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம்" என்று முடித்தார்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸால் பாதிப்பு ஒருபுறம் என்றால், அரசாங்கம் நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளாலும், அதனால் ஏற்படும் குடிபோதையாலும் இன்னும் இழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வைரஸ் பாதிப்புக்கு இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிடலாம். ஆனால், குடியால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இழப்புகளுக்கும் தமிழக அரசு மட்டுமே முழுப் பொறுப்பு.