Published:Updated:

உணவு, தண்ணீர் இல்லை! - போராட்டத்தில் இறங்கிய கோவை மருத்துவர்கள்

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

கோவை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை கேன்டீன் மூடப்பட்டதால், மருத்துவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

`தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும் அரசு அனுமதி வழங்கியுள்ள சில தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.ஜி படித்துவரும், பயிற்சி மருத்துவர்கள் பலரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

கோவை
கோவை

அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்களும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களுக்காக செயல்பட்டு வந்த கேன்டீன் எந்த முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளது. இதனால், ஹாஸ்டலில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள், தண்ணீர் மற்றும் உணவு கேட்டு கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர். மேலும், ட்விட்டரில் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு டேக் செய்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை
கோரிக்கை

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த பீலா ராஜேஷ், `கோவை கலெக்டருடன் பேசிவிட்டேன். அங்கு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது’ என்று கூறினார். ஆனால், விஷயம் சுகாதாரத்துறைச் செயலாளர் வரை சென்றும் பிரச்னை சரி செய்யப்படவில்லை என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம், ``144 தடை உத்தரவால் நாங்கள் வெளியில் எங்கும் போக முடியாது. கேன்டீனில் இருந்த உணவைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இதனிடைய, இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கேன்டீனைத் திடீரென்று மூடிவிட்டனர். இதனால், உணவு தண்ணீருக்கு நாங்கள் தவித்துக்கொண்டிருக்கிறோம். கலெக்டர் தலையிட்ட பிறகு இரவும் காலையும் உணவு கொடுத்தனர். ஆனால், அது எங்களுக்குப் போதவில்லை.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

மிகவும் குறைந்த அளவிலான உணவையே கொடுத்தனர். இங்கு 600 பேர் இருக்கிறோம். எங்களுக்குத் தரமான உணவு, தண்ணீர் கொடுங்கள் என்று டீன் அறை முன்பு கை தட்டி போராட்டம் நடத்தினோம். மருத்துவமனை நிர்வாகம் எங்களது கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்பதாகத் தெரியவில்லை” என்றனர் வேதனையுடன்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசினோம். ``கொரோனா பாதித்த மருத்துவர்கள் அங்கு சென்றதால் கேன்டீனைப் பூட்டிவிட்டனர். பாதுகாப்புக்காக அப்படி பூட்டினால், மருத்துவமனை நிர்வாகம்தான் உணவுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பிரச்னையைச் சரியான முறையில் அணுகவில்லை.

கோரிக்கை
கோரிக்கை

இதுதொடர்பாக டீனிடம் நான் எனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரும் என்னிடம் பேசினர். மருத்துவர்களுக்குத் தடையின்றி உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்” உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு