Published:Updated:

`எஸ்.ஐ-க்கு டார்ச்சர்; பெண் போலீஸிடம் தகராறு!'- போதை ஆசாமிகளால் நொந்துபோன கோவை போலீஸ்

சுப்பையா
சுப்பையா

``குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து, மகேந்திரனைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.''

கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் மகேந்திரன் என்பவர் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். காவல் நிலையத்தின் உள்ளே நேற்று மாலை பணியிலிருந்த மகேந்திரன், வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். அப்போது குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து, மகேந்திரனைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

Representational Image
Representational Image

மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்த இளைஞரைக் கண்டித்த காவலர்கள் அவரை வெளியில் அனுப்ப முற்பட்டனர். ஆனால், அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர், அந்தமான் தீவைச் சேர்ந்த  சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார் (34) என்பது தெரியவந்தது. தற்போது, அவர் ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

ஏற்கெனவே, மது அருந்திவிட்டு, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிரச்னை செய்த பெத்துராஜை போலீஸார் கைது செய்திருந்தனர். இதையடுத்து, ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் மதுகுடித்துவிட்டு போலீஸாரிடமே தகராறில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக, `என்னை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்காவிட்டால், கொன்று விடுவேன்' என்று உதவி ஆய்வாளர் மகேந்திரனை அவர் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பெத்துகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல, காந்திபுரம் போக்குவரத்து போலீஸில் பணிபுரிந்து வருபவர் சுதா. இவர் நேற்று, டெக்ஸ்டூல் பாலம் அருகே டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

அப்போது அங்கு குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் சுதாவிடம் தகராறு செய்தார். மேலும், பணி செய்ய விடாமல் சுதாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து சுதா அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த விஜய ராஜ்(27) என்ற அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, கோவை கணபதி பகுதியில் குடிபோதையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபட்ட ரத்தினபுரி பகுதியைச்சேர்ந்த ஜோதிமாணிக்கம் என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின் செல்ல