Published:Updated:

மருத்துவப் பணியாளர்களுக்கு நாடு முழுவதும் மரியாதை - கோவையில் ஏமாற்றம்!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை

நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், கோவையில் அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த காலகட்டத்திலும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக முப்படைகளும் சேர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை

அதன்படி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகள் மீது இன்று மலர் தூவப்பட்டது. தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மீது இன்று காலை மலர் தூவப்பட்டது.

இந்நிலையில், கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து C-130 ரக விமானங்கள் மூலம் கோவையில் மலர் தூவப்படும் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து முப்படையின் திட்டம் தொடர்பான நகலில் சூலூரில் இருந்து மாலை 5.55 மணிக்கு போர் விமானம் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வாட்ஸ் அப்பிலும் மாலை 6 மணி அளவில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்று தகவல் வெளியானது.

திட்டம் தொடர்பான தகவல்
திட்டம் தொடர்பான தகவல்

இதையடுத்து, மாலை 5.45 மணி அளவில் இருந்தே, இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். செய்தியாளர்களும் சென்றிருந்தனர். ஆனால், அரை அணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் அங்கு விமானம் வரவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா, ``இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த 250 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. போர் விமானங்கள் வருவதாகத் தகவல் வந்தது. அதனால் காத்திருந்தோம். ஆனால், விமானங்கள் வராததால் ஏமாற்றமோ சங்கடமோ இல்லை. அதே உறுதியோடு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை

இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் விமானப்படை தளம் தரப்பை தொடர்பு கொண்டபோது, ``விமானம் இயங்குவதாக சமூக வலைதளங்களில்தான் தகவல் பரவியுள்ளது. கோவையில் விமானம் இயக்குவது தொடர்பாக. நாங்கள் ஏற்கெனவே எங்களது மேலிடத்தில் கேட்டபோது, அப்படி ஏதும் திட்டமில்லை என்று சொல்லிவிட்டனர். இதனால், நாங்களும் அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்றனர். இதனிடையே மற்றொரு தரப்பிலோ, ``சூலூரில் C-130 ரக விமானங்கள் இல்லை. வெளியில் இருந்துதான் கொண்டுவரவேண்டும். மோசமான வானிலை காரணமாக அது முடியவில்லை. இதனால், விமானம் திருவனந்தபுரத்தில் தரையிரங்கிவிட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு