Published:Updated:

`தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.17' - காய்கறிகளை மக்களிடம் நேரடியாக விற்கும் கோவை விவசாயிகள்

விவசாயிகள் காய்கறி
விவசாயிகள் காய்கறி

கோவையில், விவசாயிகள் காய்கறிகளை நேரடியாகவே விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் நாடே முடங்கியுள்ளது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அரசு சொன்னபடி பொருள்கள் கிடைப்பதில்லை. பல இடங்களில் பொருள்கள் கிடைப்பதில்லை என்ற நிலவரத்தைத்தான் காண முடிகிறது. அப்படியே பொருள்கள் இருந்தாலும், விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்ற சோக குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காய்கறி
காய்கறி

முக்கியமாக, காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கும் காய்கறிகளை, இடைத்தரகர்களும் வியாபாரிகளும் மக்களிடம் அதிக விலையில் விற்றுவிடுவதாகப் புகார் எழுந்தது. அதைப் போக்கும் விதமாக கோவையில் விவசாயிகள் தங்களது காய்களை மக்களிடம் நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, ``விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருள்களை மக்களிடம் நேரடியாக சந்தைப்படுத்த வேண்டும் என்பதை நீண்ட நாள்களாகவே யோசித்து வந்தோம். ஊரடங்கு உத்தரவு இருக்கும் இந்த நேரத்தில் மக்களிடம் அதிக விலைக்கு விற்பதாகத் தகவல் வந்தது. ஒருவர், எங்கள் விவசாயியிடம் ஒரு கிலோ கேரட்டை ரூ.10-க்கு வாங்கினார். அதில், விவசாயிக்கு கையில் நிற்பது ரூ.8.50 தான்.

விலைப் பட்டியல்
விலைப் பட்டியல்

ஆனால், அதே கேரட்டை அந்த நபர் கிலோ ரூ.80-க்கு விற்றுள்ளார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். விளைவித்தவனுக்கு ரூ.8.50 தான் கிடைக்கிறது. இதனால் மக்களும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். அதனால்தான், சிறிய புதிய முயற்சியாக நாங்களே மக்களிடம் நேரடியாக விற்கலாம் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டோம்.

பல்வேறு விவசாயிகளின் கூட்டு முயற்சியால் அது எளிதில் நிறைவேறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. பேரூர் ஆறுமுகக்கவுண்டனூரில் உள்ள எனது தோட்டத்தில் அவற்றை விற்பனை செய்கிறேன். வாட்ஸ் அப்பில் தகவல் சொன்னால் போதும், டோக்கன் போட்டு இத்தனை மணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் சொல்லிவிடுவோம். இதன் மூலம் கூட்டம் கூடுவதையும் தவிர்க்கிறோம். நேரடியாகச் சென்றும் வழங்குவோம். அதற்கான டெலிவரி கட்டணம் தனி.

விவசாயிகள் காய்கறி
விவசாயிகள் காய்கறி

தக்காளி கிலோ ரூ.10, வெண்டை ரூ.31, கேரட் ரூ.27, முருங்கை கிலோ ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.17-க்கு நாங்கள் விற்கிறோம். நாங்கள் விற்கும் விலைக்கு கோவையில் வேறு எங்கும் கிடைக்காது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்து கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு இதை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு