Published:Updated:

முழு ஊரடங்கிலும் சுற்றுலா, கல்லாகட்டிய டாஸ்மாக்; கவிழ்ந்த ஆட்டோ! - கோவை அதிர்ச்சி

மக்கள் - ஊரடங்கு
மக்கள் - ஊரடங்கு

முழுஊரடங்கையும் பொருள்படுத்தாமல் கோவையில் மக்கள் வெளியில் உலாவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு வருகிறது.

கோவை மக்கள்
கோவை மக்கள்

முக்கியமாக, ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கோவையைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் இதுவரை 6,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 125 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் இராசாமணி தொடர்நது கோரிக்கை வைத்து வருகிறார்.

கோவை மக்கள்
கோவை மக்கள்

ஆனால், அதை காதில் வாங்காமல், ஊரடங்கு விதிகளை மீறி வருகின்றனர். நேற்றைய முழு ஊரடங்கிலும் அது எதிரொலித்தது. முழு ஊரடங்கால், கோவையின் முக்கிய சாலைகளில் எந்த போலீஸாரும் இல்லை. ஆங்காங்கே உள்ள சோதனை சாவடிகளில் மட்டும் போலீஸார் இருந்தனர்.

இதனால், மக்கள் வழக்கம் வெளியில் சுற்றினர். முக்கியமாக, சித்திரை சாவடி அணைக்கட்டில், வழக்கமான விடுமுறை தினங்களைக் கொண்டாடுவதைப் போல, மக்கள் தங்களது குடும்பத்துடன் வாகனங்களில் வந்து நேரத்தை செலவிட்டனர். ஊரடங்கையும் மீறி, தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட குடிமகன்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மது அருந்தினர்.

குடித்துவிட்டு ஒருவர் ஆட்டோ ஓட்டியதில், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இப்படி முழு ஊரடங்கு உத்தரவு முழுவதும் காற்றில் பறந்தது. “கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், இப்படி பொறுப்பில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு