Published:Updated:

கோவை: 60 நாள்களில் செயற்கை உறுப்பு நிலையம்! - கொரோனா காலத்திலும் அசத்திய அரசு மருத்துவமனை

கோவை செயற்கை உறுப்பு நிலையம்
கோவை செயற்கை உறுப்பு நிலையம்

கொரோனா காலகட்டத்திலும், கோவை அரசு மருத்துவமனையில் இரண்டே மாதங்களில் செயற்கை உடல் உறுப்பு தயாரிக்கும் நிலையம் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. மருத்துவத்துறையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. கோவை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தினசரி புதிய உச்சத்தைத் தொட்டுவருகிறது. அதேநேரத்தில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மக்களும் பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகளுக்கு கோவை அரசு மருத்துவமனையை நம்பித்தான் இருக்கின்றனர்.

கோவை செயற்கை உறுப்பு நிலையம்
கோவை செயற்கை உறுப்பு நிலையம்

ஆனால், இந்தக் காலகட்டத்திலும், கோவை அரசு மருத்துவமனை குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக யசோதா என்ற பெண்ணுக்கு செயற்கைக் கால் பொறுத்தப்பட்டது. இது குறித்து யசோதா கூறுகையில் ``விபத்து, சர்க்கரைநோய் காரணமாக கடந்த ஆண்டு என் கால் அகற்றப்பட்டது. இதனால், நான் பணிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறாள். இளைய மகள் படித்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதால், வேறு வழியில்லாமல் அவளின் படிப்பை நிறுத்திவிட்டோம்.

யசோதா
யசோதா

செயற்கைக் கால் வைக்க அதிக செலவாகும் என்பதால், அப்படியே விட்டுவிட்டோம். தற்போது, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு செயற்கைக் கால் பொறுத்தப்பட்டுள்ளது. இப்போது எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது” என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முடநீக்கியல் துறைத் தலைவர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், “செயற்கை உறுப்புகள் அமைக்க தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களில் செலவாகும். சென்னைக்குச் சென்று செயற்கை உறுப்பு அமைத்து வருவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. அதைப்போக்கும் வகையில், மேற்கு மாவட்டங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது இருக்கும். முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக இங்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்படும். இதுவரை இரண்டு பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தியுள்ளோம். இதற்காக, 10 படுக்கைகள் அடங்கிய பிரத்யே வார்டு அமைத்துள்ளோம்.

கோவை செயற்கை உறுப்பு நிலையம்
கோவை செயற்கை உறுப்பு நிலையம்

இந்தச் செயற்கை உறுப்புகளின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். கொரோனா காலகட்டத்திலும், ஏற்கெனவே முதல்வர் காப்பீடு திட்டத்தில் கிடைத்திருந்த ரூ.50 லட்சத்தை வைத்து 60 நாள்களில் இந்த மையத்தை அமைத்திருக்கிறோம். அமைச்சர்கள், சுகாதாரத்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கு வழிகாட்டினர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு