Published:Updated:

நிவாரணப் பொருள்கள் வழங்கிய தி.மு.க-வினர் மீது தாக்குதல்.. கோவையில் மூவர் கைது; ஒருவர் தலைமறைவு!

கைது
கைது

கோவையில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய தி.மு.க பிரமுகர்களைத் தாக்கிய புகாரால் இந்து முன்னணி பிரமுகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது கொரோனா வைரஸ். தமிழகத்தில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அந்த மக்களுக்கு உதவி வருகின்றனர்.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தி.மு.க சார்பில் உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் தி.மு.க 77 வார்டு செயலாளர் மதியழகன் மற்றும் அவரது மகன் மனோஜ் குமார் ஆகியோர் நிவாரணப் பொருள்களை வழங்கி வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நிவாரணப் பொருள்களை வழங்குவதாகக் கூறி, இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதாகச் செல்வபுரம் காவல்நிலையத்தில் மதியழகன் புகார் அளித்தார். இதுகுறித்து மதியழகன்,

தாக்கப்பட்ட மனோஜ்
தாக்கப்பட்ட மனோஜ்

“ஒன்றிணைவோம் வா திட்டத்தில் வந்த அழைப்பின் அடிப்படையில் நாங்கள் பட்டியலெடுத்து நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தோம். அன்றைய தினம் எங்களுக்குப் பெரும்பாலான இஸ்லாமியர்களிடமிருந்து அழைப்பு வந்தது. இதனிடையே, சில இந்து முன்னணி பிரமுகர்கள், அவர்களுக்கு (இஸ்லாமியர்கள்) மட்டும்தான் வழங்குவீர்களா. இந்துக்களுக்கு எல்லாம் உதவி மாட்டீர்களா என்று சொல்லி அடித்தனர்.

நாங்கள் எந்தப் பாரபட்சமும் பார்க்காமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவி வருகிறோம். இதே பகுதியில் உள்ள இந்துக் குடும்பங்களுக்கும் உதவியுள்ளோம். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே வன்மத்துடன் எங்களை அடித்துவிட்டனர்” என்றார். இதையடுத்து, மதியழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த கார்த்திக், தினேஷ்குமார், அஜீத்குமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது
கைது

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சந்தோஷ் குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு