Published:Updated:

கோவை சாதி மறுப்புத் திருமண விவகாரம்: `என்னை யாரும் கடத்தவில்லை!’ - பெண் வாக்குமூலம்

சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்
சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்

கோவை சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண், தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரும், திருச்சியைச் சேர்ந்த சக்தி தமிழினி பிரபாவும் கடந்த மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி கோவையில் சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட்டு, அதைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்தை தமிழினியின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன் திருமணம்
சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன் திருமணம்

அதனால், கார்த்திகேயன் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்தவாரம் தங்களது வீட்டுக்குள் நுழைந்து, தன்னையும் தன் தாயையும் தாக்கிவிட்டு, மனைவியை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாகக் கார்த்திகேயன் துடியலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

அந்தப் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, திருச்சிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருச்சி விரைந்த எங்களது தனிப்படை அங்கு மகளிர் காவல்நிலையத்தில் வைத்து சக்தி தமிழினியிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தமிழினி, `என்னை என் பெற்றோர் கடத்தவில்லை. நான் இங்கு வருவதில் என் கணவருக்கு விருப்பம் இல்லை என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

கார்த்திகேயன், சக்தி தமிழினி பிரபா
கார்த்திகேயன், சக்தி தமிழினி பிரபா

என் தந்தைக்கும் உடல்நிலை சரியில்லை. எனக்கு என் கணவர், பெற்றோர் இருவருமே முக்கியம். இரண்டு வாரம் இங்கே தங்கி என் பெற்றோரை சமாதானப்படுத்திவிட்டு, கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவேன்’ என்று கூறினார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று அவர் சொல்லும்போது, இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?

தமிழினி கோவையில் படிக்க வந்தபோதுதான் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இருவருக்கும் 11 வயது வித்தியாசம் இருக்கிறது. இரண்டாம் தாரம், வயது வித்தியாசம், பொருளாதாரம் ஆகியவற்றை நினைத்துதான் தமிழினியின் பெற்றோர் வருத்தப்படுகின்றனர். இதில் காவல்துறை யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை.

சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்
சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்

அந்தப் பெண்ணும், பெற்றோர் கணவர் இருவரையும் விட்டுக் கொடுக்காமல்தான் பேசுகிறார். அதை அவர் எங்களுக்கு வாக்குமூலம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் உறுதியளித்துள்ளார்” என்றனர்.

சக்தி தமிழினி பிரபாவின் தந்தை சுந்தர்ராஜ் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அதை வைத்து வழக்கில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கார்த்திகேயன் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மணமகன் கார்த்திகேயன்,``நான் ஏற்கெனவே திருமணம் செய்த பெண், வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். இதையடுத்து, 2015-ம் ஆண்டு நான் முறைப்படி விவாகரத்தும் வாங்கிவிட்டேன். இவை அனைத்துமே சக்தி தமிழினிக்கு நன்றாகத் தெரியும். நான் எதையும் மறைக்கவில்லை.

சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்
சக்தி தமிழினி பிரபா, கார்த்திகேயன்

என் முன்னரே, தமிழினியைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியவர்கள், அங்கு அவரை என்ன செய்வார்களோ என்று மனது பதைபதைக்கிறது. என் மனைவியை என்னுடன் பேச வைக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அவரது கருத்தை வீடியோ பதிவாகக் காவல்துறை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு