Published:Updated:

கோவை: `70 டிகிரி சாய்வில் வீடுகள்; பள்ளிக்கு 5 கி.மீ நடை!’ - நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்
நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

கோவை மாவட்டம், பொள்ளாசி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட நாகுரூத்துபதி பழங்குடி கிராமம் குறித்த செய்தி தொகுப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது நாகுரூத்துபதி. ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் இந்தப் பகுதியில் மகா மலசர் இனத்தைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர். 70 டிகிரி சாய்வில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் இருப்பதே வெளியில் பலருக்கும் தெரியாது. இங்குள்ள குழந்தைகள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று மண்ணம் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்
நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

புலி, சிறுத்தை, யானை, காட்டெருமமை போன்ற வனவிலங்குகள் அடங்கிய அடர் வனத்தை நடந்தே கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆனாலும் கூட, அந்தக் குழந்தைகள் அதை சிரித்த முகத்துடன் கடக்கின்றனர்.

கோவை: `கரன்ட் வசதியே இல்ல... அப்புறம் எங்க ஆன்லைன்?' - கலங்கும் பழங்குடி மாணவர்கள்

காண்டூர் கால்வாயை கடந்துதான் மலை ஏற வேண்டும். இரண்டரை அடி அகலமும் 15 அடி நீளமுள்ள இரும்புப் பாலத்தை கடந்து, இரு சக்கர வாகனத்தை செடிகளில் மறைத்து வைத்து விட்டு, தங்களது ஊருக்கு செல்கிறார்கள். கரடு முரடாக இருக்கும் செங்குத்தான மலையில் மூச்சு வாங்கிக்கொண்டே, கால்கள் வலிக்க 30 நிமிடம் நடந்தால் நாகுரூத்பதி வந்து சேரும்.

நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்
நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

அங்கொன்றும், இங்கொன்றுமாக செங்குதான மலையில் குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர். மழை பெய்தால் வீட்டில் படுத்து உறங்க முடியாது. அப்படி இருந்தும் கனமழை, மண் சரிவு போன்ற பிரச்னைகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள் மலசர் மக்கள்.

நடந்துகொண்டே இருப்பதாலோ என்னவோ? அந்த மக்கள் ஒல்லியான தேகத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். சோலார் விளக்குகள் பழுதடைந்தது, முழுக்க இருள் சூழ்ந்திருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் வந்து தங்களது பணிகளைத் தொடர்கின்றனர். அதே பகுதியில் விவசாயம் செய்வது, தென்னை மற்றும் கடலை தோட்டங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பது போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளுக்கு ரூ.350 வரை அவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகிறது.

காண்டூர் கால்வாய்
காண்டூர் கால்வாய்

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், ``வேட்டைக்காரன் புதூரில் ரேஷன் பொருள்களை வாங்கி வண்டி வைத்து காண்டூர் கால்வாய் வரை வந்துவிடுவோம். அங்கிருந்து தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டாவது பத்திரமாக வந்துவிடுவோம். நாங்கள் கூட பரவாயில்லை.

ஆனால், எங்களது குழந்தைகளும் 5 கி.மீ வரை நடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. எனவே, எங்களுக்கு அரசு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். மூன்று அடி அகலம் மட்டுமே உள்ள காண்டூர் கால்வாயை கடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து, சிலர் உயிரிழந்திருக்கின்றனர். சிலர் அதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எங்களுக்கு எம். ஜி.ஆர் காலத்தில் சோலார் மின்விளக்குகள் கொடுத்தனர். அது, தற்போது பழுதடைந்துள்ளது. கிராமத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவரை தொட்டிலில் கட்டி தூக்கி செல்ல வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.

நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்
நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

எனவே, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசினோம். ``ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு