அரசியல்
Published:Updated:

“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...

நல்லூர்வயல்
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லூர்வயல்

எங்க மூதாதையர் காலத்திலிருந்து நாங்க இங்கேதான் இருக்கோம். 1984 தொடக்கத்துல காருண்யா குரூப் காலேஜ் கட்டி இங்கே வந்தாங்க

அழகான பெயர் சூடிய கிராமம் ஒன்று, தனது பாரம்பர்யமான இயற்பெயரை மீட்டெடுக்கப் போராடுகிறது. மதத்தின் பெயரால் சுய அடையாளமே அழிக்கப்பட்ட கிராமத்தின் கண்ணீர்க் கதை இது!

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது நல்லூர்வயல் கிராமம். கிராமத்துக்குள் நுழைந்ததுமே சில்லென்ற காற்றில் தலையசைத்து வரவேற்கின்றன பச்சைப்பசேல் வயல்கள். கோவைக் குற்றாலம், நொய்யல் நதி, சிறுவாணி அணைக்கட்டு என்று இயற்கை அன்னை தாலாட்டும் பூமி இது. இங்குதான், கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா குழுமத்தின் கல்லூரி, மருத்துவமனை, ஜெபக்கூடங்கள் இருக்கின்றன. ‘‘சுமார் 1,000 ஏக்கர் நிலம், 12,000 மாணவர்கள், 3,000 ஊழியர்கள் என்று தனி சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் இவர்கள், எங்கள் கிராமத்தின் பெயரை காருண்யா நகர் என்று மாற்றிவிட்டனர். `நல்லூர்வயல்’ என்ற பெயர் அரசு கெஜட்டில் மட்டுமே இருக்கிறது. தபால் நிலையம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் தொடங்கி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வரை அனைத்திலும் `காருண்யா நகர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். தமிழக அரசு எங்கள் கிராமத்தின் இயற்பெயரை மீட்டுத்தர வேண்டும்” - இப்படியொரு கோரிக்கையோடு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் நல்லூர்வயல் மக்கள்.

“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...
“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...

பெயர் மீட்புக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் முத்துக்குமார் நம்மிடம், ‘‘எங்க மூதாதையர் காலத்திலிருந்து நாங்க இங்கேதான் இருக்கோம். 1984 தொடக்கத்துல காருண்யா குரூப் காலேஜ் கட்டி இங்கே வந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா நிலங்களை வாங்குனாங்க. நிலங்கள் நிறைய சேர்ந்ததுக்கு அப்புறம், சில பகுதிகளை `காருண்யா நகர்’னு குறிப்பிட ஆரம்பிச்சாங்க. ஒருகட்டத்துல அந்தப் பேரையே முகவரியா பரப்ப ஆரம்பிச்சாங்க. இப்ப வரைக்கும் அரசிதழ்ல `நல்லூர்வயல்’னு பேர் இருந்தும், தங்களோட செல்வாக்கைவெச்சு தபால் நிலையம், காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், பொதுத்துறை வங்கினு எல்லாத்துக்கும் `காருண்யா நகர்’னு பேர்வெச்சுட்டாங்க. இதை எதிர்த்து 25 ஆண்டுகளுக்கு முன்னாடியே ‘நல்லூர்வயல் பாதுகாப்புப் பேரவை’ ஆரம்பிச்சு நிறைய போராட்டங்கள் நடத்தினோம். அவங்க செல்வாக்குக்கு முன்னாடி எதுவும் எடுபடலை’’ என்றார் சோகமாக.

போராட்டங்களை முன்னெடுத்திருப் பவர்களில் ஒருவரான தேவராஜ், ‘‘காருண்யா நிர்வாகத்தினர் அவங்க கட்டடங்களைச் சுத்தி பத்தடிக்கு தடுப்புச்சுவர் கட்டியிருக்காங்க. எங்க ஊரைச் சுற்றி காடுதான் இருக்கு. இவங்க பாதையை அடைக்கறதால யானை, காட்டுப் பன்றிங்க வலசை பாதை தடுமாறி ஊருக்குள்ள வருது. இதனால விலங்குகள் - மனிதர் எதிர் கொள்ளல் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு, உயிர்ப் பலிகளும் நடந்திருக்கு. நான்கூட, காட்டுப்பன்றியால விபத்துல சிக்கி காயப்பட்டிருக்கேன். அது மட்டுமில்லைங்க... இங்கிருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல `நல்லூர்வயல்’னு குறிப்பிட்டா, அந்த மனுவை ஏத்துக்க மாட்டாங்க. ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்கள்லயும் எங்க முகவரியை `காருண்யா நகர்’னு அடையாளப்படுத்தறாங்க. எங்க அடையாளத்தை இழக்க நாங்க தயாரா இல்லை’’ என்றார் உறுதியான குரலில்.

“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...

நல்லூர்வயலைச் சேர்ந்த சக்திவேல் என்ற தொழில்முனைவோர், ‘‘இது மலையடிவாரப் பகுதி. இங்கே கட்டடம் கட்ட நிறைய விதிமுறைகளைப் பின்பற்றணும். ஆனா, காருண்யா நிர்வாகத்துக்குச் சொந்தமான சுமார் மூன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவு கட்டங்கள்ல விதிமுறைகளை முழுமையா பின்பற்றினதாகத் தெரியலை. அதையெல்லாம் ஆய்வு செய்யணும்” என்றார்.

பெயர் வெளியிட வேண்டாம் என்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், ‘‘1995-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், நல்லூர்வயலை உள்ளடக்கிய மத்வராயபுரம் ஊராட்சிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான், ‘நல்லூர்வயலை காருண்யா நகர் என்று மாற்ற வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளார். அதே 1995-ம் ஆண்டுதான், `நல்லூர்வயல்’ என்றிருந்த தபால் நிலையத்தின் பெயர் `காருண்யா நகர்’ என்று மாற்றப்பட்டது. பிறகு, காவல் நிலையம் திறக்கப்பட்டபோது, அதற்கான அரசாணையில் `காருண்யா நகர்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். பின்னர் திறக்கப்பட்ட கனரா வங்கி, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகங்களும் காருண்யா நகர் பெயரிலேயே இயங்கிவருகின்றன. ஆனால், இப்போதும் அரசிதழில் `நல்லூர்வயல்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்கள்.

“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...
“அடையாளத்தை அழிக்காதீர்கள்!” - நல்லூர்வயலின் கண்ணீர்க் கதை...

கிராம மக்கள் சிலர் நம்மிடம், “நல்லூர்வயல் மட்டுமில்லைங்க... இங்கே பாலன் நகர் இருந்துச்சு. அதை `பால் நகர்’னு மாத்திட்டாங்க. வாகைமர ஸ்டாப், மசஒரம்பு பள்ளம், முண்டாந்துறை மெட்டு, நல்லூர்வயல் பஸ் ஸ்டாப்புகளை எல்லாம் இவாஞ்சலின் ஸ்கூல் ஸ்டாப், காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் ஸ்டாப், பெதஸ்தா ஸ்டாப், காலேஜ் ஸ்டாப்னு மாத்திட்டாங்க. எங்க ஊரோட மொத்த அடையாளத்தையே கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுக் கிட்டிருக்காங்க’’ என்றார்கள் பரிதாபமாக!

இராசாமணி - முத்துக்குமார் - தேவராஜ் - சக்திவேல்
இராசாமணி - முத்துக்குமார் - தேவராஜ் - சக்திவேல்

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசா மணியிடம் கேட்டபோது, “மக்கள் என்னிடமும் மனு அளித்திருக்கிறார்கள். இது சென்சிட்டிவான விஷயம். மக்களின் கோரிக்கையை ஆய்வுசெய்து, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்க காருண்யா நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெபசிங்கைத் தொடர்புகொண்டோம். ஒரு வார காலம் பலமுறை அழைத்தும், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

மதத்தை முன்வைத்து ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கும், மக்களின் பண்பாட்டு வரலாற்றைத் திரிப்பதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை... அதைச் செய்வது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி!