Published:Updated:

அக்கம் பக்கத்தினர் இணைந்து ஆதரவற்றோருக்கு உதவி.. களமிறங்கிய கோவை மக்கள்

உதவி
உதவி

கோவையில் அக்கம் பக்கத்தினர் இணைந்து அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதைப் போலவே, ஊரடங்கு உத்தரவால் பலரும் வேலை இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசுடன் இணைந்து பல தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களாலான உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

கோவை
கோவை

இது ஒருபுறம் இருக்க, வீட்டில் இருப்பவர்கள் நேரம் போவதில்லை என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய அக்கம், பக்கத்தில் உள்ள மக்களுடன் இணைந்து சமையல் செய்து அதை அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி பசியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அந்த இளைஞர் மணிகண்டன், ``கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் பல தன்னார்வலர்கள் இணைந்து நமது நீர்நிலைகளை மீட்டு வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் அந்தப் பணிகளை தொடர முடியவில்லை. மக்கள் பலரும் உணவுக்காக கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது. எங்களது பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் காலை 6 மணிக்கே பணிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு 11 மணிக்கு மேல்தான் உணவு கிடைக்கிறது.

உணவு தயாரிக்கும் பணி
உணவு தயாரிக்கும் பணி

இதனால், அவர்கள் சோர்ந்து விடுகின்றனர். முதலில் எங்களது வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து நாங்களே சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தோம். தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், வட இந்திய தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் என்று உணவு கொடுத்து வந்தோம். பிறகு பொருளாதாரச் சிக்கலால் சில நாள்களுக்கு அதைத் தொடர முடியவில்லை.

அதேநேரத்தில், மக்கள் எங்களது உதவியை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். எங்களது அமைப்பினர் தங்களாலான உதவிகளைச் செய்தனர். நான், என் அம்மா, மனைவி வேலை செய்வதைப் பார்த்து, எங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினரும் இணைந்தனர். அதிகாலை 4 மணிக்குப் பணியில் இறங்கிவிடுவோம். ஆளுக்கு ஒரு வேலை செய்வோம். 7 மணிக்கு எல்லாம் சாப்பாடு தயாராகிவிடும். பிறகு, அதை நாங்களே பார்சல் செய்து, உணவை வழங்கி வருகிறோம்.

உதவி
உதவி

ஒரு நாளுக்கு சுமார் 250 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். நமக்காக உழைப்பவர்களுக்கு உணவு கொடுப்பதில் எங்களுக்கும் திருப்தி, உணவு சாப்பிடுபவர்களுக்கும் ஒரு திருப்தி. எங்களால் முடிந்தப் பணிகளை தொடர்ந்து செய்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு