கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க பிரமுகர்கள் சிலர் அந்த அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற பா.ஜ.க-வினர்,

அந்த அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு அருகே பிரதமர் நரேந்திர மோடி படத்தை மாட்டினர்.
பாஜக-வினர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து, மோடி படத்தை மாட்ட முயன்றதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ``அனுமதியின்றி அலுவலகத்துக்குள் வந்து புகைப்படம் மாட்டுவது தவறு. நீங்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை. தற்போது மாஸ்க் அணியாமல் அலுவலகத்துக்குள் யாரும் வரக் கூடாது என்ற விதி உள்ளது.

நீங்கள் அனுமதி வாங்கிவிட்டு வாருங்கள்.’ என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கு பா.ஜ.க-வினர் ``முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்களை யார் வைத்தது?
நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள்ளுங்கள். மோடியின் படத்தை அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து பா.ஜ.கவினர் மீது பூலுவப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, போலீஸார் கைதுசெய்தனர்.