Published:Updated:

கோவை: கட்டாயப்படுத்திய அப்பார்ட்மென்ட்; மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞர்

இளைஞர் ஆண்டனி குரூஸ்
இளைஞர் ஆண்டனி குரூஸ்

கோவையில் இளைஞரை வலுக்கட்டாயமாக மின்கம்பி மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவரின் மகன் ஆண்டனி குரூஸ். ஆண்டனி பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இதனிடையே, ஆண்டனி குரூஸ், சுங்கம் பகுதி அருகே உள்ள மெட்ரோ பார்க் எனும் அப்பார்மென்ட்டுக்கு பெயின்ட் அடிக்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த அப்பார்ட்மென்ட் மேலாளர் விவேக் மற்றும் மோகன் ஆகியோர் அந்த வளாகத்தில் உள்ள ஓர் மின்கம்பத்தில் பெயின்ட் அடிக்குமாறு அந்தோணியை வலியுறுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த அப்பார்ட்மென்ட்
விபத்து நடந்த அப்பார்ட்மென்ட்
கோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா! - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து

ஆனால் ஆண்டனி, `மாட்டேன்’ என மறுத்துள்ளார். அதற்கு விவேக் தரப்பில்,`நாங்கள் மின்சாரத்தை அணைத்து வைத்துள்ளோம். ஒன்றும் ஆகாது’ என்று சொல்லி ஆண்டனியை ஏற்றிவிட்டுள்ளனர்.

ஆண்டனி மின்கம்பத்தில் ஏறி பெயின்ட் அடிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள், ஆண்டனி குரூஸை மீட்டு அருகில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டனி குரூஸ்க்கு, சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

மின்கம்பம்
மின்கம்பம்

எனவே, இந்த விபத்துக்குக் காரணமான விவேக், மோகன் மீது நடவடிக்கை எடுத்து, ஆண்டனிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆண்டனி குரூஸ் கூறுகையில், ``ஒரு வாரமா அந்த அப்பார்ட்மென்ட்லதான் வேலை செஞ்சுட்டு இருந்தேன். கரன்ட் கம்பி மேல ஏற சொன்னாங்க. அதுல கரன்ட் வரும்; அதனால ஏற மாட்டேனு சொன்னேன். அவங்க, `அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ ஏறு’னு சொல்லிட்டே இருந்தாங்க. வேற வழியில்லாம ஏறினேன். ட்ரான்ஸ்ஃபாமர் வெடிச்சு விழுந்துட்டேன்.

ஆண்டனி குரூஸ்
ஆண்டனி குரூஸ்

எனக்கு நிதானமில்ல. இதுக்கு மேல பேச முடியாது” என்று வலியுடன் முடித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீஸார் விவேக், மோகன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு