Published:Updated:

``சாலையில் பயணிக்கும் அனைவருமே சொந்தங்கள்தான்!"- மூதாட்டிக்குச் செய்த உதவியால் வைரலான கோவைக் காவலர்

கோவை சிங்காநல்லூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மயங்கியதையடுத்து, போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், அவரைத் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

போக்குவரத்து போலீஸ்
போக்குவரத்து போலீஸ்

கோவை, சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சண்முகசுந்தரம். இவர் நேற்று வழக்கம்போல சிங்காநல்லூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

போக்குவரத்து போலீஸ்காரர் செய்த உதவி
போக்குவரத்து போலீஸ்காரர் செய்த உதவி

அப்போது, அந்த வழியில் மூதாட்டி ஒருவர், தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அந்த வாகனம் சிங்காநல்லூர் சிக்னல் அருகே வரும்போது மூதாட்டி திடீரென மயக்கமடைந்தார்.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த உறவினர் நிலை தடுமாறி நின்றார். இதைக்கண்ட சண்முகசுந்தரம், மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியைத் தூக்கிச்சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

போக்குவரத்து போலீஸ்
போக்குவரத்து போலீஸ்

சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.

மூதாட்டிக்கு உதவி
மூதாட்டிக்கு உதவி

தலைமைக் காவலர் சண்முகசுந்தரத்திடம் பேசினோம். `` சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் என் குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்ப்பேன். வயதானவர்களைப் பார்க்கும்போது என்னுடைய பாட்டி, தாத்தாவாகத்தான் நினைப்பேன். சிங்காநல்லூர் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

நேற்று அந்த மூதாட்டி மயக்கமடைந்ததும், உடன் வந்தவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் உடனடியாக உதவி செய்தோம். இது அவ்வப்போது நடப்பதுதான். இதைப் பெரிதாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்றார் இயல்பாக.

பணியில் இருந்த காவலர் ஒருவர் மயக்கமடைந்த மூதாட்டியை மனிதநேயத்துடன், தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கோவை சாலையில் மயங்கிய ஓர் மூதாட்டியை போக்குவரத்து போலீஸ் ஒருவர் கையில் தூக்கி மீட்டு, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். #Video #Coimbatore #Police

Posted by Junior Vikatan on Tuesday, November 5, 2019