Published:Updated:

சிதைக்கப்படும் கோவை ரேஸ் கோர்ஸ்! - அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் கோவை ஸ்மார்ட் சிட்டி

கோவை ரேஸ் கோர்ஸ்
கோவை ரேஸ் கோர்ஸ்

150 ஆண்டுக்கால பழைமைவாய்ந்த கோவை ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு எது சிறப்பம்சமோ, அந்தப் பசுமைச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டுவருகிறது.

கோவை மாநகராட்சியில், சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்துவருகின்றன. ஏற்கெனவே சாக்கடைக் கழிவுகளாக மாறிவரும் குளங்களை மீட்டெடுக்காமல், அவற்றை அலங்கரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகப் புகார் எழுந்திருந்தது.

கோவை ரேஸ் கோர்ஸ்
கோவை ரேஸ் கோர்ஸ்
கோவை: சில மாதங்களிலேயே இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்!-என்ன நடக்கிறது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்?

இந்தநிலையில், கோவை மையப்பகுதியாகவும், பசுமை நிறைந்த சுற்றுசூழல்கொண்ட ரேஸ் கோர்ஸ் பகுதியை ஸ்மார்ட் ஆக்குகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டி இயற்கையைச் சிதைப்பதாக புகார் எழுந்துள்ளது.

ரேஸ் கோர்ஸ் பகுதியை நவீனப்படுத்தும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின. இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 150 ஆண்டுக்கால பழைமைவாய்ந்த ரேஸ் கோர்ஸுக்கு எது சிறப்பம்சமோ, அந்தப் பசுமைச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டுவருகிறது.

ரேஸ் கோர்ஸ் எதிர்ப்பு
ரேஸ் கோர்ஸ் எதிர்ப்பு

ஸ்மார்ட் ஆக்குகிறோம் என்ற பெயரில் மரங்களும் செடிகளும் வெட்டப்பட்டுவருகின்றன. இதை எதிர்த்து ஆன்லைனில் கையெழுத்து இயக்கம் நடந்துவருகிறது. கறுப்புச் சட்டை அணிந்து, வாக்கிங் சென்று தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர் கோவைவாசிகள்.

ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், ``கோவை ஸ்மார்ட் சிட்டியில் குளங்களை அழகுபடுத்தும் பணிகளைத்தான் செய்துவருகின்றனர். கட்டிய சில மாதங்களில் சுற்றுசுவர் இடிந்து விழுகிறது என்றால், இவர்கள் வேலை எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும்? மொத்தப் பணத்தையும் ஆக்கபூர்வமாக செலவிடாமல் வீணடித்துவருகின்றனர். மரங்களை வெட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

கோவை மாநகராட்சியில் அடிப்படைத் தேவைகளே நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. மக்களுக்குப் போதிய அளவுக்குக் கழிப்பறை வசதிகள், பார்க்கிங் வசதிகள் இல்லை. பல இடங்களில் பொதுக்கழிப்பறை இல்லை. பெண்கள் பொதுவெளிக்கு வந்தால், ஏதாவது தனியார் கடைக்கோ, இடத்துக்கோ சென்றுதான் கழிப்பறை செல்ல முடிகிறது.

அதேபோல, பொதுக்குடிநீருக்கும் இங்கு வழிஇல்லை. குப்பை இல்லாத கோவையை உருவாக்க ஸ்மார்ட் சிட்டியில் எந்தத் திட்டமும் இல்லை. குழந்தைகள் விளையாட நல்ல விளையாட்டு மைதானம்கூட இல்லை. அழகுபடுத்துவது தேவைதான். அதற்கு முன்பு சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

இப்போதைய சூழலுக்கு அழகுபடுத்துவதற்குக் குறிப்பிட்ட குறைந்த சதவிகிதத்தை ஒதுக்கினாலே போதும். ஸ்மார்ட் என்றால், என்னவென்றே தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்” என்றார் வேதனையோடு.

இது குறித்து சமூகச் செயற்பாட்டாளர் தியாகராஜன் கூறுகையில், ``கோவையில் எத்தனையோ அடிப்படைத் தேவைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. எதில் எளிதாகப் பணம் எடுக்க முடியுமோ அதை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்கின்றனர். அலங்கார விளக்குகளுக்காகக் குழி தோண்டி நிலத்தடியில், வயரிங் விடுகின்றனர். இதனால் மரத்தின் வேர்கள் பாதிக்கப்பட்டு சுற்றுசூழல் சிதையும்.

தியாகராஜன்
தியாகராஜன்

இது போன்ற திட்டங்களில் பராமரிப்பு மிகவும் முக்கியம். 2010 உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட இப்போது உருப்படியாக இல்லை. அதேபோல, ஆட்சி மாறினால் காட்சிகள் மாறலாம்.

கவுண்டம்பாளையம் பகுதியில் மின் மயானத்தைச் சுற்றி தடுப்புச்சுவர் கட்டியதற்காக, ரூ 1.36 கோடி ஒதுக்கியதாகக் கூறுகின்றனர். மத்திய அரசும் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. எந்த இடத்திலும் அவர்கள் ஆய்வு செய்தனரா என்பதுகூடத் தெரியவில்லை. இவர்கள் செய்யும் பணிகளுக்கும், திட்ட மதிப்பீட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நிறைய முறைகேடுகள் நடந்துவருகின்றன.

பொதுமக்களுக்குப் பயனளிக்கும் எந்தத் திட்டத்தையும் இவர்கள் நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. இதன் மூலம் அமைச்சரும், அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களும்தான் ஆதாயமடைவார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கூறுகையில், ``ரேஸ் கோர்ஸில் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் எந்த ஒரு கருத்து கேட்காமல், மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் அளவுகள் குறைக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்டுவருகிறது.

கார்த்திக்
கார்த்திக்

இயற்கை எழில் சூழ, பசுமையாக, கோவையின் நுரையீரலாக இருந்த இந்தப் பகுதி தற்போது செயற்கையான உலோக கட்டமைப்புகளுடன் குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போன்று காட்சியளிக்கிறது.

கோவையில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்திலும் அவசர அவசரமாக டெண்டர்கள்விட்டு, ஊழல் முறைகேடுகள் செய்வதில் மட்டுமே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமி ஒப்பந்ததாரர்கள் கவனம் செலுத்தி, தரமில்லாத பொருள்களைக்கொண்டு, மக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மக்கள் வரிப் பணத்தை வீணடித்து, இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கெல்லாம் வேலுமணி பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்” என்று எச்சரித்திருக்கிறார்.

``கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்கு வெடித்துச் சிதறியது. உக்கடம் பெரியகுளம் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஸ்மார்ட் சிட்டி சுற்றுச்சுவர் சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. ஆனால், இது போன்ற பல விவகாரங்களில் ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ-வாக இருக்கும் ராஜகுமார் பதிலளிப்பதே இல்லை.

மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன்தான் பேசுகிறார். ஏற்கெனவே, முன்னாள் எம்.எல்.ஏ கே.பி ராஜூ மகள் சுகன்யா சி.ஐ.ஓ-வாக நியமிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், இப்போதுவரை கோவை ஸ்மார்ட் சிட்டி நிர்வாகத்துக்கு ஆற்றல் மிகுந்த அதிகாரிகள் இல்லை.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் சாலையின் அகலத்தைக் குறுக்கிவிட்டனர். அதே ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைக்கிறோம் எனக் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினர். சில மாதங்கள் மந்தமாகப் பணிகள் நடந்தன. அதன் பிறகு முழுவதுமாக நின்றுவிட்டன. அங்கு திடீரென்று தடுப்புச்சுவர் கட்டிவிட்டனர். தற்போதுவரை ஹாக்கி மைதானமும் வரவில்லை, பள்ளி மாணவர்களும் மைதானத்தைப் பயன்படுத்த முடியவில்லை.

அதேநேரத்தில், நேரு ஸ்டேடியத்தில், ஒரு தனியார் ஃபுட்பால் கிளப் பயன்பெற பெரிய விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். இப்படி கோவை ஸ்மார்ட் சிட்டி முழுவதும் முறைகேடுகளும், சர்ச்சைகளும்தான் நிறைந்திருக்கின்றன” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில்,``ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஒரு மரம்கூட வெட்டப்படவில்லை. அடர்ந்த புதர்களும், செடிகளும் மட்டும்தான் அகற்றப்பட்டுள்ளன. இங்கு காலியாக உள்ள இடங்களில் பூர்வீகமான மரங்களைவைக்க ஆலோசித்துவருகிறோம். இது குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம். குடியிருப்போர் சங்கம் உள்ளிட்டவர்களின் கருத்துகளைக்த் கேட்ட பிறகுதான் பணிகளை தொடங்கினோம்.

ரேஸ் கோர்ஸைச் சுற்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கும் திட்டம் இல்லை. போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததால்தான், தாமஸ் பூங்கா இடிக்கப்பட்டுள்ளது. அங்கு விளையாட்டு மைதானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சிப் பெயரை களங்கப்படுத்துவதற்காக சிலர் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு