Published:Updated:

தனிமைப்படுத்தாத பெண் அதிகாரி; திருமணத்துக்கு வந்த மணமகன்! - கோவையில் மீண்டும் கொரோனா

கோவை
கோவை

கோவையில், ஒரு பெண் அதிகாரி மற்றும் மணமகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து பச்சை மண்டலத்தில் இருந்த கோவையில், விமான சேவை தொடங்கிய பிறகு பாதிப்புகள் மீண்டும் தொடங்கிவிட்டன. கடந்த வாரம் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஆனாலும், கோவையிலேயே வசிக்கும் மக்கள் யாருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை.

கோவை
கோவை

இந்நிலையில், சென்னையில் பயிற்சிக்குச் சென்று திரும்பிய, சிறை நன்னடத்தைத் துறை பெண் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், 29 நாள்களுக்குப் பிறகு கோவையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பயிற்சிக்காகச் சென்ற அந்தப் பெண் அதிகாரி, கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை மார்க்கமாக கோவை வந்துள்ளார்.

அப்படி கோவை வந்தவர், தனிமைப்படுத்திக்கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். சென்னையில் சிறை நன்னடத்தைத் துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை எடுக்கும்போது, அதில் கோவை அதிகாரியின் பெயரும் இருந்துள்ளது. அப்படித்தான், அந்தப் பெண் அதிகாரிக்கு சோதனைசெய்து பார்த்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவை
கோவை

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. “பெண் அதிகாரி தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பணிக்குத் திரும்பியது தவறு” என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் தமிழகம் வந்துள்ளனர். ஒரு பிரிவினர் திண்டுக்கல் செல்ல, திருமணம் செய்வதற்காக மணமகன் உள்பட 8 பேர் கொண்ட மற்றொரு பிரிவினர் பொள்ளாச்சி வந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல் வந்த சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்படவே, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சேகரித்தபோது, பொள்ளாச்சி வந்தவர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

கோவை
கோவை

இதைத் தொடர்ந்து அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. “எல்லைப் பகுதியிலேயே அவர்களை தடுத்து பரிசோதனை செய்திருக்க வேண்டும். எப்படி அவர்களை பரிசோதனை செய்யாமல் விட்டனர் என்று தெரியவில்லை” என உயரதிகாரிகள் புலம்பிவருகிறார்கள். இதனிடையே, மணமகனுக்கு கொரோனா உறுதியானதால், திருமணம் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு