Published:Updated:

கோவை: சாதிக் கொடுமையா?! - காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அரசு ஊழியர்!

காலில் விழுந்து மன்னிப்பு
காலில் விழுந்து மன்னிப்பு

கோவை மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``இப்ப எல்லாம் யாரு சார் சாதி பார்க்கறாங்க?” என்ற கருத்து இப்போதும் பரவலாக இருந்துவருகிறது. ஆனால், அதை உடைக்கும் வகையில் ஏராளமான தீண்டாமைக் கொடுமைகளும் அரங்கேறிவருகின்றன. அப்படி ஓர் சம்பவம்தான் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நடந்துள்ளது.

ஒட்டர்பாளையம்
ஒட்டர்பாளையம்
மதுரை: தீண்டாமை வன்கொடுமைச் சட்டம்; தவறாகப் பயன்படுத்துகிறதா காவல்துறை?!-குற்றச்சாட்டும் விளக்கமும்

அன்னூர் ஒன்றியத்திலுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணி செய்துவருபவர் முத்துசாமி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபாலசாமி என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ``ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே, முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

காலில் விழுந்து மன்னிப்பு
காலில் விழுந்து மன்னிப்பு

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், கலைச்செல்வியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது உதவியாளர் முத்துசாமி கோபிநாத்தைத் தடுக்க முயன்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் மேலும் ஆத்திரமடைந்த கோபிநாத், சாதிப் பெயரைச் சொல்லி, முத்துசாமியைத் தகாத வார்த்தையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. ``நான் நினைத்தால் நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது. நீ இந்தப் பணியில் தொடர வேண்டுமென்றால், என் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்” என்று கூறிதாகவும் சொல்லப்படுகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு
காலில் விழுந்து மன்னிப்பு

தற்போது, முத்துசாமி கோபிநாத்தின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேவேளையில், கோபிநாத்தும், கலைச்செல்வி, முத்துசாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில், `தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக’ புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருக்கிறது.

ஆதிக்க சாதி, அடிமை சாதியெல்லாம் இப்போது கிடையாது! - ‘சீரியஸாக’ சொல்கிறார் எம்.ஆர்.காந்தி!
அடுத்த கட்டுரைக்கு