Published:Updated:

`அழைப்பு முதல் கல்வெட்டு வரை அமைச்சர் புகழ்!’ - அவசர அவசரமாகத் திறக்கப்பட்ட கோவை ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி திறப்புவிழா
ஸ்மார்ட் சிட்டி திறப்புவிழா

தேர்தல் அறிவிப்பால், `அமைச்சர் உத்தரவின்பேரில்...’ எனக் கல்வெட்டுவைத்து கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை அதிகாரிகள் அவசர அவசரமாகத் திறந்துவைத்தனர்.

கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்துவருகின்றன. குளக்கரைகளை அழகுப்படுத்துவது, வாக்கிங் பாதை, சைக்கிள் பாதை, மாதிரி சாலை போன்ற அந்தப் பணிகளுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தன. இந்தநிலையில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் திறப்புவிழா கோவையில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

`நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய தூண்கள்?' - கோவை மேம்பாலம் விவகாரத்தில்  நீதிமன்றம் ஷாக்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் சிட்டியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் கடந்த சில நாள்களாக வழங்கப்பட்டுவந்தன.

ஆனால், திடீரென்று நேற்று மாலை சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், அவசர அவசரமாக அதிகாரிகளைவைத்து திறப்புவிழா நடத்த திட்டமிடப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் திறப்புவிழா நடந்தது.

இதற்காக, ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பில், ``மாண்புமிகு நகாராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் திறந்துவைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உக்கடம் பெரியகுளம் பகுதியில் போடப்பட்டிருந்த பெரிய மேடையில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஏற மறுத்துவிட்டார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேனரில் அமைச்சர் வேலுமணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வெட்டை நேரில் வைக்கவில்லை.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

அதற்கு பதிலாக குமாரவேல் பாண்டியன் காணொலிக் காட்சி வழியாகத் திறந்ததும், திரையில் ஒரு கல்வெட்டு தெரிந்தது. அந்தக் கல்வெட்டிலும், ``அமைச்சர் வேலுமணி அவர்களின் உத்தரவின்பேரில், ஆணையர் குமாரவேல் பாண்டியன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இடைவெளியில், கோவை மாநகராட்சி பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், ஜெயலவிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொகுதிவாரியாக வீடு வீடாகச் சென்று பரிசுப் பொருள்களை வழங்கிவருகின்றனர்.

நேற்று மாலை தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும்கூட, இரவு வரை பரிசுப் பொருள்கள் தடையில்லாமல், கோவையில் பல்வேறு பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டனவாம்!

அடுத்த கட்டுரைக்கு